chennireporters.com

பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி நீதிபதி அரக்கோணத்தில் கைது.

இன்ஸ்பெக்டரை மிரட்டிய டுபாக்கூர் நீதிபதியை அரக்கோணத்தில் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

 

அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியை சார்ந்தவர் கபிலர்.  இவரது மகன் நெப்போலியன் மீது அவரது மனைவி அம்பத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அதனை தொடர்ந்து நெப்போலியன் மனைவி அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பேரில் கபிலர் அவரது மகன் நெப்போலியன் மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை புகார் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கபிலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை என் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது நானும் நீதிபதி தான் ஈ.பி விஜிலென்ஸில் இருக்கிறேன் என்று பொய் சொல்லி இன்ஸ்பெக்டரை மிரட்டினார்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரை மிரட்டியதால் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகார் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து அரக்கோணத்தில் பதுங்கி இருந்த டூபாக்கூர் நீதிபதி கபிலரை தனிப்படை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா மூர்த்தி கைது செய்தார் .

இந்த கபிலர் மீது ஈபியில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் கபிலர் மீது குற்ற பிரிவு எண் 539/2022 இந்திய தண்டனை சட்டம் 506(i), 507( iv)19 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!