chennireporters.com

ஏழை மாணவியின் வாழ்க்கையில் ஒளியேற்றிய எம்.பி. ஆ.ராசா.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவி படிக்க முடியாமல் கூலி வேலை செய்து வந்ததைக் கண்டு கேள்விப்பட்ட நீலகிரி தொகுதி தி.மு.க எம்.பி.ஆ. ராசா மாணவியை நேரில் வரவழைத்து அவர் படிப்பதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த மாணவியின் பெற்றோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை சத்யா நகரை சேர்ந்தவர் குமார்.  கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி வேலம்மாள் மற்றும் மகள் மாரியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் படித்த மாரியம்மாள் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார். தனது தந்தைக்கு உதவியாக கூலி வேலைக்கு சென்று வந்தார்.

குமார் தனது மகளை மேல்படிப்பு படிக்க வைக்க முடியாமல் வறுமையில் இருந்து வந்தார்.  இந்த நிலையில் நீலகிரி தொகுதி எம்.பி ஆ. ராசாவிடம் உதவிகேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் கிடைக்க பெற்றதும் ராசா அவர்களை சென்னைக்கு வரவழைத்து மாரியம்மாளின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

அதாவது மாணவி படிக்க விரும்பிய படிப்பில் சேர அனைத்து உதவிகளையும் செய்து தந்துள்ளார்.

உடனடியாக கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஒரு லட்ச ரூபாய் கல்வி கட்டணத்தை முன்பணமாகவும் நான்கு ஆண்டுக்கான கல்வி கட்டணத்தையும் கட்ட அவர் ஒப்புக்கொண்டார்.

சினிமா படத்தில் வருவதைப் போல பத்து நிமிடத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளின் அப்பாவும் அம்மாவும் கண் கலங்கி நின்றனர்.

இந்த நிகழ்ச்சியை பார்த்து கண் கலங்கி நின்ற மாரியம்மாளிடம் நீ வருத்தப்படக்
கூடாது.   எந்த உதவி வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து உதவி கேளுங்கள் என்று ஆறுதல் படுத்தி அனுப்பியிருக்கிறார் ஆ. ராசா இது குறித்து பேசிய குமார் எம்.பி அவர்கள் என் மகளின் மேல் படிப்பிற்கு உதவி செய்யுமாறு கடிதம் எழுதியிருந்தேன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்.பி எங்களை நேரில் வரவைத்து எங்கள் மகள் படிக்க விரும்பிய நர்சிங் படிப்பில் சேர்த்து விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த என் மகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய எம்பி இராசா அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி என்று தெரிவித்தார்.

ஏழை மாணவியின் வாழ்க்கையில் ஒளியேற்றிய திமுக எம்.பி ராசா அவர்களுக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வைரலாகி வருகின்றனர்.

இதையும் படிங்க.!