chennireporters.com

நெல்லையப்பர் தேர் திருவிழா. பக்தர்கள் உற்சாகம்.

திருநெல்வேலி நகரிலுள்ள, சுவாமிநெல்லையப்பர் காந்திமதி பிரசித்திப்பெற்ற தேர் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் அமாவாசை தினம் முடிந்து ஒன்பதாவது நாளில் துவங்குகிறது .

 

இங்கு சுமார் 500 ஆண்டுகளாக, வருடம் தோறும் இத்தேர் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வந்தது.

கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கொரோனா கால தடையை அடுத்து இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில், இந்த வருடம் இத் தேர்த்திருவிழா ஜூலை 11 ஆம் தேதி 517வது வருட விழாவாக கோலாகலமாக துவங்கியது.

நெல்லை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் காலை முதலே புத்தாடை அணிந்து ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சாரை சாரையாக நெல்லையப்பர் சுவாமி கோவில் முன்பு தரிசிக்க குவிந்தனர். பின்பு மேளதாள ஆரவாரத்துடன் தேர் வடம் இழுக்கும் விழா துவங்கியது. “அரோகரா` என்று சொல்லி தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.

சுமார் 200 மீட்டர் நீளம் கொண்டு தடித்த கயிற்றினால் ஆன தேரின் வடத்தை பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்தோடு இழுத்து கொண்டு சென்றனர்.

பின்பு நான்கு ரத வீதிகளை கடந்து இரவில் நெல்லையப்பர் சுவாமி தேரினை தேர் நிற்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

மிகப்பழமையான இந்த தேர் சுமார் 450 டன் எடை கொண்டது 28 அடி நீளம் 28 அடி உயரம் கொண்டது.

தொடக்கத்தில் ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த தேர் பின் படிப்படியாக பாதுகாப்பு கருதி உயரம் குறைக்கப்பட்டது.

மொத்தம் ஐந்து தேர்கள் இந்த திருவிழா நாட்களில் நகரை வலம் வருகிறது. தேரோட்டம் துவங்கும் முந்தைய நாளில் விநாயகர் தேர் முதலில் நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பின்பு சுப்பிரமணிய சுவாமி தேர் கொண்டுவரப்பட்டு நிலையத்தை அடைகிறது.

மறுதினம் காலை பிரதான நெல்லையப்பர் சுவாமி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் பின்பு அவரின் துணைவியார் காந்திமதி அம்மன் தேரில் அவதரிக்கிறார் இறுதியாக சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட்டு தளத்தினை அடைந்து தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.

 

மிகப்பழமையான நெல்லையப்பர் தேர் பழமையான பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். 51 சக்தி பீடத்தின் முதலாவதான ஒன்று. பஞ்ச சபைகளில் தாமிர சபை கொண்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குப் பின்பு தேர்திருவிழா துவங்கியதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் நெல்லை மாநகரமே குலுங்கியது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர்.

போக்குவரத்து வழிகள் மாற்றப்பட்டன. உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டது.

முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தனதேரோட்ட நாளன்று நெல்லை நகரமே விழாக்கோலம் கண்டது . அடுத்த வருடம் இதைவிட சிறப்பான தேரோட்ட விழாவாக கம்பீரத்துடன் நெல்லையப்பர் நகரில பவனி வருவார் என நெல்லை நகர மக்கள் உற்சாகமான பக்தி பரவசத்துடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!