தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (28-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கை.
காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா : ஆளுநரின் அலட்சியம் சந்தேகங்களை எழுப்புகிறது!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டு, புள்ளி விபரப்படி, தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெருமளவில் இளைஞர்களையும், மாணவர்களையும் அடிமையாக்குவதோடு, அவர்களை தவறு செய்யத் தூண்டுவதோடு, தற்கொலையை நோக்கியும் தள்ளுகிறது.
இதனை புரிந்துக்கொண்ட தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022′-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம் தேதி, அனுப்பி வைத்தது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியாகி விட்டது.
எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனை கவனத்தில் கொள்ளாமல், ஆளுநரின் இத்தகைய போக்கு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
பெரும் கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசின் கைக்கூலியான ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரும் நிறுவனங்களின் கையிலிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தானாகத் தடை செய்யும் என்று நாம் எதிர்பார்த்தது தவறு தான்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆன்லைன் ரம்மியைப் போல இதிலும் மோசடி கும்பல்களின் கைவரிசையால் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதே இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகி விட்டது.
எனவே, தமிழ்நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, எதிர் வரும் சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் வகையில், மீண்டும் ஒரு சட்ட மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.