ஆவடி தாலுக்கா அலுவலகத்தில் மக்கள் பணிகள் எதுவும் நடை பெறவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வந்த நிலையில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.காம் இணையதளத்தில் தாசில்தார் சிவக்குமார் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
தாசில்தார் சிவக்குமார் தலைமை சர்வேயர் அறிவழகன் சர்வேயர் பாலமுருகன் மற்றும் சில அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து வருமானம் வரும் வேலைகளை மட்டும் செய்து தருவதாகவும் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பிக்கும் ஏழை பொதுமக்களுக்கு எந்தவித பணிகளையும் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தோம்.
பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் அதிகாரிகளும் இ சேவை மையம் சர்வரும் வேகமாக வேலை செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்தநிலையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சருமான சா.மு. நாசர் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆவடி தாலுகா அலுவலகம் சென்று திடீர் ஆய்வு நடத்தினார் .
அப்போது ஏழை மக்களுக்கான பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் எதுவும் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.
கோபப்பட்ட அமைச்சர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் யார் வேலை செய்தாலும் அவர்களை அரசு வேடிக்கை பார்க்காது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்தார்.
அது தவிர புதிய பட்டா கேட்போர் பட்டா பெயர் மாற்றம் ரேஷன் கார்டு என பொதுமக்கள் பலர் மனு கொடுத்தும் அந்த மனுக்கள் மீது தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நாசர் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி ஆமை வேகத்தில் செயல்பட்ட தாசில்தார் சிவகுமாரை மாற்றம் செய்ய சொல்லி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் உடனடியாக தாசில்தார் சிவக்குமார் அதிரடியாக இரவோடு இரவாக பொன்னேரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
ஆவடி பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் சா.மு. நாசருக்கு நன்றி தெரிவித்தனர்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் அடிக்கடி அமைச்சர் அனைத்து துறை அலுவலகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தாசில்தாரை மாற்றிய அமைச்சருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது.