chennireporters.com

50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம்.

சென்னையின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் 50வது ஆண்டினை கொண்டாடுகிறது.

திமுக ஆட்சியின் போது மேம்பாலங்கள் அமைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்களை அதிகளவில் சென்னையில் கட்டி உள்ளது. இதன் பயனாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறது.

 

அண்ணா மேம்பாலத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இதனை அன்றைய காலத்தில் ஜெமினி மேம்பாலம் என்று அழைத்தனர்.

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும் இதுதான். இந்த மேம்பாலம் 1973ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது. இந்தப் பாலத்தினை திறக்கும் போது அண்ணா மேம்பாலம் என பெயர் சூட்டிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, அண்ணாவிற்கும் சிலையும் அமைத்துள்ளார்.

அதேபோல் அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் உள்ள இடத்தில் மேம்பாலத்தின் மேல் செல்பவர்களும் பார்க்கும் வகையில், தூண் அமைத்து பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குதிரைப் பந்தயத்திற்கு தமிழ்நாட்டில் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் பாலத்தின் கீழே குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா மேம்பாலம் ஜூலை 1 ஆம் தேதி தனது 49வது பிறந்தநாளை நிறைவு செய்து, 50ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை – நுங்கம்பாக்கம் சாலை – ராதாகிருஷ்ணன் சாலை – ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் ஒன்றை கட்ட கடந்த 1971ம் ஆண்டு திட்டமிடப்பட்டபோது, அதற்கு ரூ.66 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

 

250 அடி நீளம், 48 அடி அகலத்தில் அனைவரும் வியக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெரும் துணையாக இருந்தார்.

1969ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி இந்த மேம்பாலத்தை கட்ட உத்தரவிட்டார்.

21 மாதத்தில் இந்த மேம்பாலத்தை ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்டரக்சன் கம்பெணி நிறுவனத்தின் பொறியாளர்கள், நெடுசாலை கிராமிய பணிகள்துறை பொறியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டது.

1973ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி அழகிய தோற்றத்துடன் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்தார் கருணாநிதி.

இன்றைக்கு 49வது ஆண்டை நிறைவு செய்து, 50வது தொடக்க நாளில் பயணிக்கும் அண்ணாசாலை சென்னை நகரவாசிகள் கடப்பதற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதையும் படிங்க.!