chennireporters.com

உண்மையை மூடி மறைத்த பள்ளி நிர்வாகம். மௌனம் கலையப்படுமா? மக்கள் அதிகாரம் கேள்வி.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவி கொலை தொடர்பாக மக்கள் அதிகாரத்தின் செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள் சமூக வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை வைரலாகி வருகிறது.

அவர் எழுதிய கட்டுரையை வாசகர்களுக்கு நாம் அப்படியே தருகிறோம்.

அன்பார்ந்த ஊடகவியலாளர்களே !

வணக்கம். கள்ளக்குறிச்சியில்  உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒரு மாணவி மர்மமாக இறந்ததும் அது தொடர்பான வன்முறையும் நீங்கள் அறிந்ததே. அந்த வன்முறைக்கு காரணம்  என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இந்த அரசும் அதிகார வர்க்கமும் தாமதமாக கையாண்டது தானே இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்.   தாமதிக்கப்பபட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?

தனியார்மயக் கல்விக் கொள்களையை இத்தனை நாள் சகித்துக் கொண்டிருந்த மக்கள் ஒரு நாளைக்கு இப்படித்தானே எரிமலையாக வெடிப்பார்கள். ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடினார்கள்.

அதையும் வன்முறை என்று மொத்தமாக மூடி மறைத்தார்கள். அப்போது ஊடகவியலாளராகிய நீங்கள்தானே இந்த பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வந்தீர்கள். தமிழகத்தில் விவாதமாக்கினீர்கள் . அறத்தின் பக்கம் நின்றீர்கள். இப்போதும் அதை செய்ய வேண்டுமல்லவா ?

ஒரு மர்ம மரணம், அதைத்தொடர்ந்து போலீசின் அழுத்தமான அமைதி மற்றும் இழுத்தடிப்பு வேலை. இதன் காரணமாக பொங்கி எழுந்த பெற்றோர் அதனால் உணர்வு ஊட்டப்பட்ட மக்கள் இப்படித்தான், இதுதானே இயங்கியல் பூர்வமான நடைமுறையாக இருந்திருக்க முடியும் .  இல்லை வேறு யாராவது காசுக்காக அழைத்து வந்து இந்த கலவரத்தை நடத்தினார்கள் என்று கூற முடியுமா? அப்படி என்றால் ஏன் இதுவரை நிரூபிக்கப்பபடவில்லை.

இல்லை , மற்றவர்கள் சொல்வது போல ஆர்எஸ்எஸ் பிஜேபியைச் சேர்ந்தர்வர்கள் வன்முறையை நடத்தினார்கள் என்றால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.  இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களும் பொதுமக்களும் தானே.

இன்றைக்கு காலை வரை 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துவிட்டன.  இன்னும் எத்தனை பேரை கைது செய்வார்கள்?
வீரப்பன் தேடுதல் வேட்டை போல கண்ணில் பட்டவர்களை எல்லாம் தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் கைது செய்ய வேண்டுமென்றால் கல்வி தனியார்மய கொள்ளைக்கு எதிராகப் போராடதவர்கள் யார் ?

அவர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு அல்லவா சிறை போடப்படவேண்டும் ?  அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக இளைஞர்களை கைது செய்யப்படுவதும் அந்த வன்முறைக் காட்சிகளையும் ஒளிபரப்புவது நோக்கமென்ன மக்கள் வன்முறையாளர்கள் என்பதா?

நடுநிலை என்றால் இதுவரை கல்வி தனியார்மயத்தால் எத்தனை மாணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான பதிவுகள் தொடர்ந்து ஒளிபரப்பி இருக்க வேண்டும்.

நம் கண் முன்னே போலீஸ் ராஜ்யம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.   அது உங்கள் கண்களை உறுத்தவில்லையா? மெரினா கடற்கரையில் 10 பேர் வந்து ஆர்ப்பாட்டம் செய்தால் குடியா மூழ்கிவிடும்? அதற்கு ஏன் சென்னையில் இவ்வளவு பரபரப்பு ?

 

கள்ளக்குறிச்சி மர்ம மரணம் பிரச்சினையை சாக்காக வைத்துக்கொண்டு போலீஸ் ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே தேடுதல் வேட்டையின் களமாக மாற்றி கொண்டிருக்கிறதே இதற்கு எதிராக உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டாமா?

பிரச்சினை இப்போது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்தாரா என்பதல்ல. ஒரு நியாயமான போராட்டத்திற்கு யார் யார் ஆதரவு கொடுத்தார்களோ, பேஸ்புக்கில் லைக் ,ஃபார்வர்டு செய்தார்களோ அத்தனை பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக  ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதல்லவா ?

தொலைக்காட்சி / பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் சிலர் மட்டுமல்ல முற்போக்கு சக்திகளின் மௌனமும் மிகவும் நெஞ்சை கனக்க வைக்கிறது.

நடத்தப்படும் இந்த அரசு வன்முறை காஷ்மீரில் நடப்பதற்கு ஒப்பானதாக தெரியவில்லையா? எதற்காக கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு? இதற்காக ஜாமர் கருவி?

இனி தனியார் பள்ளிகளின் அட்டூழியத்திற்கு எதிராக மட்டுமல்ல ; தமிழ்நாடு அரசுக்கு எதிராக யார் போராட்டம் செய்தாலும் இப்படித்தான் ஒடுக்குகின்ற மாடல் அல்லவா நடைமுறைப்படுத்தப்படுகிறது?

அன்று எடப்பாடி ஆட்சியில் நடத்தப்பட்டது தூத்துக்குடி மாடல் ! இன்று ஸ்டாலின் ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாடல் ! இரண்டுமே மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தான்.

இப்போது நடத்தப்படும் போலீஸ் ராஜ்யத்துக்கு எதிராக குரல் கொடுங்கள். நன்றி !

தோழமையுடன்
தோழர் மருது, செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
996236321
[email protected]

இதையும் படிங்க.!