திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட தானிப்பூண்டி மற்றும் மாநெல்லூர் வரை சிப்காட் தொழிற்சாலை சாலை விரிவாக்க பணி 4 கிலோமீட்டர் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்கு டெண்டர் விடப்பட்டு 54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணியில் கிரவல் மண் கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணியில் நாமக்கல்லை சேர்ந்த PSK என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சாலை அமைக்கும் பணிக்கு அரசு குவாரிகள் அல்லது தனியார் குவாரிகளில் இருந்து சவுடு, கிராவல் மண் கொண்டு வந்து சாலை அமைக்க வேண்டும். ஆனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள காப்புக்காடுகள், அரசு புறம்போக்கு நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் சட்டவிரோதமாக ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து கிராவல் மண்ணை இரவு பகல் பாராமல் திருட்டுத்தனமாக மண்ணை திருடி சாலை அமைத்து வருகின்றனர்.
இதனால் காப்புக்காடு பகுதிகளில் உள்ள செம்மரங்கள் மற்றும் பல மரங்கள் சேதப்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக கனிம வளத்தை சுரண்டி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி சாலை அமைக்கும் PSK நிறுவனத்தின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திரன் என்கிற சமூக ஆர்வலர் அரசு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளார்.
குறிப்பாக தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், ஆர் டி ஓ, தாசில்தார், கனிமவளத்துறை அதிகாரிகள் என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட தர்மேந்திரன் கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணனிடம் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில் தாசில்தார் உட்பட அனைத்து அரசு துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் PSK நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறை தட்டிக் கேட்க வில்லை அரசு அதிகாரிகள் தங்களுடைய பணியை செய்யவில்லை என்கிற பேசும் ஆடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் உடனடியாக சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட PSK நிறுவனம் கடந்த எடப்பாடி ஆட்சியிலும் பல சாலை மற்றும் தடுப்பணைகளை கட்டியுள்ளது. தற்போது திமுக ஆட்சியிலையும் பல அரசு பணிகளை செய்து வருகிறது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் PSK நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட PSK நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீகாந்த், குருமூர்த்தி ஆகியோரை நாம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து அவர்களது தரப்பு கருத்தை தெரிவித்தால் நாம் வெளியிட தயாராக இருக்கிறோம்.