Chennai Reporters

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அரசு கட்டிடங்களை கட்டவேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு.

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்தவொரு அரசு கட்டிடங்களும் கட்டக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி, வக்கீல் கற்பகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 32 மாவட்டங்களில் அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதுமுள்ள அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
அனைத்து அரசு கட்டிடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

இதுகுறித்து இரண்டு மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல் எந்தவொரு அரசு கட்டிடங்களும் கட்டக் கூடாது.

இதுசம்பந்தமான சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!