45 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் படித்த நண்பர்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தினருடன் சந்தித்து பேசிய நெகிழ்ச்சியான தருணம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 1980 -81 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பதினொன்றாம், 12 ஆம் வகுப்பு படித்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மற்றும் தங்களது குடும்பத்தினருடன் தமிழகமெங்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். இந்த நிலையில் முகநூல் வாயிலாக ஒவ்வொரு நண்பர்களையும் தேடிப்பிடித்து அவர்களை தொடர்பு கொண்டு பழைய நண்பர்கள் ஒன்று கூடி ஒரு கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்று நண்பர்கள் முடிவு செய்தனர் அதன்படி 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடி சந்தித்து பேசினர்.
ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியாமல் தங்களது பள்ளிப் பருவத்தில் வகுப்பில் என்ன புனைப் பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டார்களோ அந்த பெயர்களை சொல்லி மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். நீண்ட காலம் கழித்து ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழித்து சந்தித்த பிறகு ஒவ்வொரு மாணவர்களும் தங்களது ஆனந்த கண்ணீரில் தங்களது பள்ளி படிப்பை நினைத்து நிகழ்ச்சியில் மனம் உருகி பேசினார்கள்.
தங்களுடன் படித்த சில மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தனியார் நிறுவனங்களிலும் உயரிய பொறுப்புகளிலும் தற்போது பதவி வகித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழக காவல்துறையில் டிஎஸ்பியாக பஞ்சாட்சரம் என்பவர் பணியாற்றி வருகிறார் அதே ஆண்டு அதே பள்ளியில் படித்த அமுதா என்பவர் தற்போது அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவர்களது குடும்பத்துப் பிள்ளைகளும் நல்ல முறையில் படித்து ஆளாக்கப்பட்டுள்ளனர். சிலர் அந்தமான், பெங்களூர் ,ஆந்திரா, போன்ற வெளிமாநிலத்திலேயே தற்போது தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
விழா தொடங்கியதும் ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாக மேடைக்கு வந்து தாங்கள் யார் தங்கள் பெயர் என்ன என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மாணவர்களும் தேசத் தொடங்கிய போது அவர்களது மனதில் பழைய பள்ளி பருவ நினைவுகளும் கல்லூரி நினைவுகளும் நெஞ்சில் நிழலாட தொடங்கின. இதனால் அனைத்து மாணவர், மாணவிகளும் தங்களது குடும்பத்தினருடன் சந்தோஷ கண்ணீரில் மிதந்தனர் பிறகு பேசத் தொடங்கிய ஆசிரியர்கள் தங்கள் அர்ப்பணிப்போடு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தந்ததாகவும் தங்களது மாணவர்கள் நீண்ட காலம் கழித்து தங்களை அடைத்து பெருமைப்படுத்தியதற்கு நாங்கள் நன்றி கடன் பெற்று இருக்கிறோம் என்றும் நெகிழ்ச்சியாக பேசினார்கள்.
விழாவில் பேசிய ஒரு மாணவர் பாலு என்பவர் தற்போது பிடிஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பேசும்போது நான் ஆசிரியர்களிடம் அடி வாங்கி படித்த காரணத்தாலே நான் தற்போது இந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளேன் என்று நா தழுதழுக்க பேசி அழுதார். அப்போது அரங்கமே கண்ணீரில் நனைந்திருந்தது. பழனி என்ற மாணவர் பேசுகையில் நான் தற்போது ஆங்கில ஆசிரியராக ஆந்திர மாநிலத்தில் இருக்கிறேன். ஆசிரியர்களின் நல்ல வழிகாட்டுதலினாலேயே நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன் என்று தெரிவித்தார். ஜாய்ஸ் அமுதா என்பவர் பேசுகையில் நானும் இந்த பள்ளியில் படித்து பிற்காலத்தில் தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்டு எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் நான் ஆசிரியர்கள் இருக்கையின் வரிசையில் உட்கார்ந்து இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
இராமஞ்சேரி வேலு என்ற மாணவர் பேசுகையில் இன்று ஒரு நாள் மற்றும் நாங்கள் நண்பர்களுடன் எங்கள் இளமை காலத்து நினைவுகளையும் பள்ளிப் பருவத்து நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் அப்போது அவர்களுடன் எப்படி பேசிக் கொண்டோமே அதேபோல பெயர் சொல்லியும் வாடா போடா என்றும் பேசிக் கொள்வோம் தங்களது குடும்பத்தினர் யாரும் அதை பொருட்படுத்தக் கூடாது என்று பேசினார்.
தரங்கம்பாடியை சேர்ந்த செல்வக்குமார் என்ற மாணவர் பேசும்போது நான் ஒரு கிருத்துவ பாதிரியாரின் மகன் நாங்கள் ராமஞ்சேரி கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது அடிக்கடி நாங்கள் ஊர் மாற வேண்டிய சூழல் ஏற்படும் எனவே இந்த பள்ளியில் சேர்க்க என் அப்பா முயன்ற போது பள்ளியில் சேர்க்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் என்னை இந்த பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கினார். அதன் பிறகு இந்த பள்ளியில் நான் படித்தேன் என் தம்பி எனது தங்கைகளும் படித்தார்கள். இந்த பள்ளியில் படித்ததனால் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் இந்த பள்ளியை என் வாழ்நாளில் மறக்க முடியாது அதற்காகவே நான் நீண்ட தூரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தேன் என்று பேசினார்.
எம்.என். நந்தகுமார் என்ற மாணவர் பேசும்போது நான் விலங்கியல் ஆசிரியர் வெங்கட்ராஜ் சாரிடம் வாங்கிய அடியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நான் தற்போது அவரைப் பார்க்கும்போது அவரிடம் வாங்கிய அடி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது என்று பேசினார்.
பெங்களூரில் இருந்து வந்த டி. சுப்பிரமணி என்ற மாணவர் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் ஐ.டி. துறையிலும் ஒரு மகள் விமானத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை என் வாழ்நாளில் மறக்கமுடியாது என்று பேசினார்.
இயற்பியல் ஆசிரியர் ருத்ரா ரெட்டி பேசும் போது 45 வருடங்கள் கழித்து நான் உங்களிடம் பேசுவதற்கு காரணம் அன்றைய உணவு முறை பழக்கவழக்கங்கள் தான். இயற்கையான உணவுகளை விளைவித்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்று பேசினார். உங்களையெல்லாம் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம் என்று பேசினார்.
விலங்கியல் ஆசிரியர் வெங்கட்ராஜ் பேசும்போது எல்லோருடைய முகமும் தற்போது மாறி இருக்கிறது மாணவர்கள் யார் என்பதில் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமமாக இருக்கிறது. இருப்பினும் உங்களுக்கு பாடம் சொல்லித் தந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல மாணவர்களை உருவாக்கி இருக்கிறோம் என்கிற சந்தோஷம் என் மனதில் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.
பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் கோவிந்தப்ப நாயுடு 45 ஆண்டுகள் கழித்து இந்த மாணவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு பாடம் சொல்லித் தந்த பெருமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள் மூன்று பேர் தற்போது நம்மிடம் இல்லை. அவர்கள் மறைந்து விட்டனர். அவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் படி அனைத்து அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். விழாவிற்கு வந்திருந்த அனைத்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.விழாவில் சில மாணவிகள் வராமல் போனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவே சில மாணவர்கள் தெரிவித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலு, பஞ்சாட்சரம், நந்தகுமார், சோமசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
பள்ளிக்கு ஒரு பீரோவையும் பரிசளித்தனர். விழாவில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது . அதேபோல மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜி.கோவிந்தப்பநாயுடு, இயற்பியல் ஆசிரியர் ருத்ரா ரெட்டி, விலங்கியல் ஆசிரியர் கே.எஸ். வெங்கட்ராஜு, வேதியியல் ஆசிரியர் ஆனந்த நாயுடு, கைத்தறி ஆசிரியர் துரைக்கண்ணு, பொருளாதார ஆசிரியர் திருமதி விஜயலட்சுமி, லாசரஸ், உடற்பயிற்சி ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளியின் கிளர்க் நூர் பாஷா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.