இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘2டிஜி’ கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வருமென மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் ‘2டிஜி’ எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) கண்டுபிடித்துள்ளது.
அதை சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இந்த மருந்தை ஒரு ஆய்வகத்துக்கு மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர். சங்கரநாராயணன், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ( டி.ஆர்.டி.ஓ) கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களை கேட்டுள்ளோம்.
அதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளது அந்த நிறுவனங்களின் தகுதி குறித்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு செய்து வருகிறது’ என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், அந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என்று கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்த விவரங்களை வழங்குவதாக மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம் பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.
சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை கவலைத் தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழ் அடைந்திருப்பார் என்று தெரிவித்தனர்.
அதற்கு, ஆந்திராவின் ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வக்கீல் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.