chennireporters.com

திருவள்ளூர் வீட்டுக்குள் புகுந்து வழக்கறிஞரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கொலையாளிகள்..

திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற பகுதியில் வழக்கறிஞர் ஒருவரை வீட்டினுள் புகுந்த கொலையாளிகள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடினார்.

கொலையாளி களை போலீசார் தேடி வருகிறார்கள் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கறிஞரை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திருவள்ளூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளேரித் தாங்கள் என்ற பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் வெங்கடேசன் (36) காக்களூர் பகுதியை சேர்ந்த சத்யா (30) என்ற பெண்மணிக்கும் வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது இது பற்றி தகவல் தெரிந்ததும் சத்தியாவின் பெற்றோர் தனது மகளை கண்டித்தனர்.

ஆனால் சத்தியா வெங்கடேசனுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.சத்தியா ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்கு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத்,மற்றும் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து சத்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வீட்டில் வழக்கறிஞர் வெங்கடேசன் சத்யாவுடன் இருந்தார் சத்தியாவுக்கும் உறவினர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

இதில் ஆத்திரமடைந்த சத்தியாவின் குடும்பத்தினர் திடீரென வழக்கறிஞர் வெங்கடேசனை தலை மற்றும் உடல் முழுக்க பல இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்தியா அவர்களை தடுக்க முயன்றார் அதில் அவருக்கும் தலையில் பலமாக வெட்டு விழுந்தது சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டதும் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர் இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்யா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் இதற்கிடையே பக்கத்து வீட்டினர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் பொதுமக்கள் சிலரும் அங்கு வந்தனர்.

உடனே அங்கிருந்த சத்தியாவின் குடும்பத்தினர் வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு தப்பி ஓடினர் இந்நிலையில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த வீட்டின் அருகே வந்த போலீசார் ஜன்னல் வழியாக பார்த்தனர் அதில் ரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் தரையில் விழுந்திருந்தது தெரிந்தது உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் சத்யாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை தொடர்பாக சத்யாவின் தந்தை சங்கர் தாய் செல்லம்மாள் தம்பி வினோத் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு ஏற்கனவே மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் சத்யா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தான் காக்களூர் ஆஞ்சநேயபுரத்திற்கு வாடகைக்கு வீடு எடுத்து வந்திருந்தார்  வழக்கறிஞர் வெங்கடேசன் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட செய்தி,திருவள்ளூரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!