தேனி பிரஸ் கிளப் சார்பில், தீபாவளியை ஓட்டி, சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், அனைத்து குவாரி உரிமையாளர்கள், அனைத்து டாஸ்மாக் கடை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தனியார் மதுபான பார் உரிமையாளர்கள், அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள். அனைத்து அரசு ஒப்பந்ததாரர்கள். நீங்கள் மாதம் தோறும் கொடுக்கும் லஞ்சப் பணத்திற்காக ஆயிரக்கணக்கான போலி நிருபர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் இவர்கள் அனைவரும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. மாதம் தோறும் தங்களது அலுவலகங்கள் மற்றும் குவாரி பகுதிகளுக்கு வந்து பணம் வசூலிக்கும் நிருபர்கள் தொடர்பான பட்டியல் உங்களிடம் இருப்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனை உடனடியாக எங்களது சங்க நிர்வாகத்தின் வாட்ஸ் அப் எண் 9043200200 க்கு உடனடியாக படம் பிடித்து அனுப்பவும். மாதம் தோறும் நீங்கள் ஏன் மாமுல் வழங்க வேண்டும்.
அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் குடோன், நுகர்வோர் வாணிபக் கழக கிட்டங்கி, வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாதந்தோறும் 50 முதல் 100 போலி நிருபர்களுக்கு மாதம் ரூ 200 முதல் ரூபாய் 500 வரை லஞ்சமாக வழங்குகிறீர்கள்.
இது மக்கள் வரிப்பணம். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? இதை எந்த கணக்கில் காட்டுகிறீர்கள்? எதற்காக நீங்கள் லஞ்சம் வழங்க வேண்டும்? உடனடியாக லஞ்சம் வழங்குவதை நிறுத்துங்கள். அடுத்த முறை உங்களிடம் பணம் வசூலிக்க வருவது எங்கள் நிருபராகக் கூட இருக்கலாம். மறைமுக கேமரா மூலமாக லஞ்சம் வழங்குவதை படம் பிடித்து செய்தி வெளியிட வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள்.
நீங்கள் செய்யும் செயலால் உண்மையான செய்தியாளர்களுக்கும், செய்தித் துறைக்கும் உள்ள மரியாதையே போய்விட்டது. ஆகையால், இந்த மாதம் முதல் பணம் கேட்டு வரும் போலி நிருபர்கள் அனைவரையும் உடனடியாக படம் எடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் எங்கள் பிரஸ் கிளப் எண் 9043200200 க்கு புகார் செய்யுங்கள். பணம் தராவிட்டால் செய்தி வெளியிடுவோம் என கூறும் எவரும் பத்திரிக்கையாளர் இல்லை.
இவர்களால் வாட்ஸப் ஸ்லைடு தவிர மற்ற எதையும் செய்ய முடியாது. மேலும் PDF பத்திரிகைகளில் வேண்டுமென்றால் செய்தி வெளியிடலாம். அவ்வாறு செய்பவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அவ்வாறு உங்களை மிரட்டினால் நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்போம் என்று உறுதி அளிக்கிறோம். சமீபத்தில் பெரியகுளத்தில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்ட ஆறு நிருபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்ட காவல்துறை முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளது. அடுத்தது உங்களுக்கான வாய்ப்பு.
நீங்கள் புகார் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட காவல்துறை தயாராக உள்ளது. போலி நிருபர் என்று எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? என்று உங்களுக்கு குழப்பம் வரலாம். உங்களிடம் பணம் கேட்டு வரும் அனைவருமே போலி நிருபர்கள் தான். அவர்கள் எத்தகைய தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பணிபுரிந்தாலும் பணம் கேட்டு வர எந்த அதிகாரமும் இல்லை.
பணம் கேட்டு வந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள். போலி நிருபர்களை ஒழிக்கும் எங்களது பிரஸ் கிளப்பின் நடவடிக்கைக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டால் இவர்கள் வேறு வழியில்லாமல் பிழைப்புக்கு ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். நிச்சயம் சென்று விடுவார்கள் அடுத்த தீபாவளியை யாவது உழைத்து, உழைக்கும் நிர்வாகத்தின் மூலம் போனஸ் பெற்று கொண்டாடட்டும். நீங்கள் ஒத்துழைத்தால் இந்த போலிகளை ஒரே மாதத்தில் ஒழித்துக் கட்ட முடியும். தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.
இவர்களால் நீங்கள் எவ்வளவு நிர்வாக சிக்கல்களை அனுபவித்து வருகிறீர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். யாரிடம் புகார் செய்வது என்று நீங்கள் தவித்து வருவதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு விடிவாகவும், போலிகளுக்கு முடிவாகவும் இருக்க தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் முடிவெடுத்துள்ளது. ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து நீங்களும் நிம்மதி அடையலாம். அனைவரும் ஒருங்கிணைந்து இந்த போலிகளை ஒழித்துக் காட்டுவோம்!
நன்றி.
தமிழ்நாட்டிலேயே முன்னுதாரணமாக யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது நல்ல பத்திரிகையாளர்களோ அல்லது போலி பத்திரிகையாளர்களோ யாருக்கும் பணம் தரக்கூடாது என்று வேண்டுகோள் வைத்த தேனி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்துக்கு தமிழ்நாடு முழுவதும் பாராட்டுக்கள் இருந்து வருகிறது இந்த நிலையில் கோவை மற்றும் சென்னையில் உள்ள சில தரமற்ற நல்ல பத்திரிகையாளர்களை வைத்து சங்கம் நடத்தாத சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.