திருவண்ணாமலையில் நேற்று பாறை சரிந்து விழுந்து வீடுகள் மண்ணில் புதைந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு மேலும் ஒரு ராட்சத பாறை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு இடத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது திருவண்ணாமலை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 4.45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய சத்தத்துடன் பாறை ஒன்று சரிந்த நிலையில், மண் சரிந்து 3 வீடுகள் மூடப்பட்டன. அதில் 1 வீடு முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ளது. 35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து, வீடுகளை மூடியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர். இந்நிலையில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட்கும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்புப் பணிகளில் பல சவால்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் பாதைகள் குறுகலாக உள்ளன. வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக ஜேசிபி, பொக்லைன், போன்ற கனரக இயந்திரங்கள், வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, மரங்களை பேரிடர் மீட்புக் குழுவினரே வெட்டி அகற்றினர். மண்ணை தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இந்த மலையின் வேறொரு பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு ஒரு பெரிய பாறை சரிந்துள்ளது. நேற்று பாறை சரிந்து விழுந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மேலும் ஒரு ராட்சத பாறை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு இடத்திலும் பாறை சரிந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
மண் மற்றும் பாறை சரிவு தொடர்ந்து வருவதால், திருவண்ணாமலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, “இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர்.
எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று நேற்று முதல் முயன்று வருகிறோம். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 18 மணி நேரமாச்சு.. மண்ணில் புதைந்த 7 பேரை மீட்பதில் இருக்கும் 5 சவால்கள்.. திணறும் மீட்புப் படையினர் மிகப்பெரிய பாறை ஒன்றுஉள்ளது. இந்தப் பாறை உருண்டால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சேதம் ஏற்படும் போது, மலைகளை பிளந்து எடுக்கக் கூடிய பணி செய்பவர்களை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து அழைத்துள்ளோம். மதியத்திற்குள் வந்து விடுவார்கள். அதுவும் கீழே இருக்கும் மண் உறுதித்தன்மை பெற்ற உடனே தான் மலைகளை உடைக்க முடியும். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
அவர்கள் வந்த பிறகு, கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலைமை தெரியும். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் சூழலிலும் மீட்பு பணி நடந்து வருகிறது. போதுமான அளவுக்கு மீட்பு பணிகளில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை காலங்களில் பிரச்சனைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.