chennireporters.com

திருச்சி எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரு தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் பைக்குகளில் நான்கு பேர் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றனர்.அவர்களை சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தடுத்து நிறுத்தினார்.

ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.இதனிடையே எஸ்.ஐ. பூமிநாதன் அந்த மோட்டார் பைக்குகளை துரத்தி சென்றார்.அப்போது பூமிநாதனை ஆடு திருடர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக 8 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.மோட்டார் பைக் சென்ற இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு இடத்தில் ஆடு திருடர்கள் மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்வதும் அவர்களை எஸ்.ஐ. பூமிநாதன் வேகமாய் துரத்திச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் அந்த சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடினர்.இது தொடர்பாக ஆறு பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார். அதில் சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர் .

சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் மூன்று சிறுவர்களும் ஒரு இளைஞரும் அடங்குவர்.பூமிநாதன் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த தொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்கள் பல ஆண்டுகளாக ஆடுகளை திருடி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இதையும் படிங்க.!