திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கொட்டப்பட்டு பகுதியில் இருக்கிறது.
இந்த நிலம் அவருடைய பூர்வீக இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டாவில் உள்ள பெயரை மாற்றுவதற்காக சீனிவாசன் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்.
அங்கு பணியில்இருந்த துணை வட்டாட்சியர் கோகுல் என்பவர், சீனிவாசனிடம் பட்டாவில் பெயர் மாற்றுவதற்கு 2 .50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதை அடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் சீனிவாசன் புகார் செய்தார்.
புகாரைப்பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை துணை வட்டாட்சியர் கோகுலிடம் கொடுக்க கூறியிருக்கின்றனர்.
பிறகு சுமார் இரவு 8.30 மணி அளவில் தாசில்தார் கோகுல் தனது வலது கையால் பணத்தைப் பெற்றுக்கொண்டு பாக்கெட்டில் வைத்திருக்கிறார்.
அப்போது உடன் வந்திருந்த 2 அதிகாரிகளும் துணை வட்டாட்சியர் கோகுலை கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
அவருடைய அறையை ஆய்வு செய்ததில் மேலும் 25 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுது அவரது அலுவலகம் மற்றும் ராமலிங்க நகரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர்.
மேலும் அவர் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போதும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போதும் அவர் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தாசில்தார் கோகுலை பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.