வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொடுமைப்படுத்திய வழக்கில் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி உள்பட மூன்று அதிகாரிகளை சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர தயாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
சிவக்குமார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதோடு, டி.ஐ.ஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் காணாமல் போனதற்கும் சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, சிவக்குமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஐ.ஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர தயாள்.
தமிழக சிறைகளில் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக சிறைத்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. எனவே அதிகாரிகளின் அத்துமீறல்களும் அவர்களின் அதிகார குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் ஏழைகள் மீது காட்டப்படும் வன்மத்தை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சிறை துறைகளில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்க தனி நீதிபதிய அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் அனைத்து சிறைகளிலும் சிசிடிவி காட்சிகள் அமைத்து ஒரு மானிட்டரிங் கமிட்டி தமிழ்நாடு அளவில் அமைக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். மேலும் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிறைத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் வங்கி கணக்கு மற்றும் குடும்ப வருமானங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்கின்றனர் சிறையில் நடக்கும் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பினர்.