வி.சி.க தலைவர் தொல். திருமாவளன் எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை காயத்ரி ரகுராமிற்கு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு, கூட்டமொன்றில் பேசிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்து கோயில்களின் அமைப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் இதற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருமாவின் பேச்சு குறித்து, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘திருமாவளவனுக்கு இந்துக்கள் புடவை அனுப்புங்கள். அவருக்கு தைரியம் இருந்தால், நேருக்கு நேர் என்னிடம் இந்துகள் குறித்து பேச சொல்லுங்கள்’ என்று பல கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
காயத்ரி ரகுராமின் இந்த கருத்துகள், பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, காயத்ரி ரகுராமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி, சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துகளை தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இது, திருமாவளவனின் பேருக்கு களங்கம் ஏற்படுத்தம் வகையில் உள்ளது எனவே நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காயத்ரி ராகுராம் ஜூலை 12-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.