வேங்கை வயல் – தலித் மக்களின் குடிநீர்த் தொட்டிக்குள் மனித மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளை தமிழ்நாடு அரசும் சிபிசிஐடி காவல்துறையும் பாதுகாப்பது எதற்காக?
சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டனம். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வேங்கை வயல் இறையூர் கிராம தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த நபர் யார் என்று குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை நீடித்து வந்தது. அதற்கு குரல் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை, நேரடி விசாரணை என்று பல வடிவங்களில் விசாரணையை தொடங்கியது காவல்துறை.
விசாரணை தொடங்கிய முதலே பட்டியலின மக்களையே குற்றம் சாட்டி தான் விசாரணை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு தகுந்தாற் போல இரண்டு செய்தியை வெளியிட்டு தற்போது வழக்கை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தலித்கள் தான் குற்றவாளிகள் என்று தற்போது சிபிசிஐடி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் அதனை மறைத்து அப்பாவிகளையே குற்றவாளி ஆக்கியிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். சாதிய உள் நோக்கமும் வெறுப்பும் கொண்டு முன் முடிவோடு அறிக்கையை தயார் செய்துள்ளது தெரிகிறது. காரணம் செய்த பரி சோதனையிலேயே முக்கியமானது டிஎன்ஏ பரிசோதனை தான். ஆனால் அதனை ஏன் காவல்துறை வெளியிடவில்லை? என்பதில் சந்தேகம் எழுகிறது. சிபிசிஐடி காவல்துறை வெளியிட்டுள்ள ஆதாரம் என இரண்டு செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.ஒன்று, சுதர்சன் தாய் பேசிய ஆடியோ, இரண்டு, மலம் கலந்த குடி நீர்த் தொட்டியின் மீது அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மலம் உள்ள கவர் அருகே பேசி சிரிக்கும் வீடியோ. இதனை வைத்து தலித் இளைஞர்கள் தான் செய்தார்கள் என்று முடிவுக்கு வந்துள்ளது. இது முரணான செய்தி. தவறான செய்தியும் கூட. இந்த இரண்டு செய்தியும் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது ஏற்கனவே வெளிவந்தவை.

அவற்றில் முக்கியமானது மக்கள் குழந்தைகள எல்லாரும் வாந்தி பேதி ஆகி மருத்துவரை அணுகிய போது மருத்துவர் சொன்னதன் அடிப்படையில் தண்ணீர்த் தொட்டியை சோதனை செய்ய மேலே ஏறிப் பார்க்கும் போதுதான் தொட்டிக்குள் மலம் இருப்பது தெரிய வருகிறது. அதனை ஏறிப் பார்த்து மக்களுக்கு கூறியவர்கள் தற்போது குற்றம் சாட்டப்பட்ட இதே இளைஞர்கள் தான்.
அதிர்ச்சி அடைந்த மக்கள் புகார் கொடுக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வந்த மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் தொட்டியை சோதனையிடுகிறார்கள்.தொட்டி மீது ஏறச் சொல்லி நிர்வாக, காவல்துறையினர் தான் கூறுகிறார்கள். அதிகாரிகள் டேங்க் அருகே புடைசூழ நின்றுள்ளனர். அப்போது நேரம் காலை 7.30 மணி. ஏறிப் பார்த்து அதனை கவரில் போட்டு பரிசோதனைக்கு எடுத்து வந்து கொடுத்த இளைஞர்கள் தான் இன்று குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் சொன்னதை செய்த விவரம், சூது அறியா இந்த இளைஞர்கள் எப்படி குற்றவாளிகள் ஆனார்கள்? இன்று வரை சமரசம் செய்துகொள்ளாமல் அன்றாடம் விசாரணைக்கு சென்றுவரும் இளைஞர்களில் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள். உண்மையை வெளியில் கொண்டு வந்த இந்த நபர்கள் குற்றவாளிகள் என்றால் அரசும் நிர்வாகமும் யாருக்கு சேவை செய்கிறது?
இரண்டு, விசாரணையைத் தொடங்கியது முதல் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒத்துக்க சொல்லி அடித்துள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே மக்கள் சொல்லி வெளிவந்த செய்தி. “நீதான் செய்தாய் என்று ஒத்துக்க சொல்றாங்க” என்ற அச்சத்தை உருவாக்கி இருந்தது காவல்துறையின் ஆதிக்க வர்க்க அணுகுமுறை.அதை வைத்துதான் அந்த ஆடியோ வில் சுதர்சனின் தாய், “அடித்தாலும் ஒத்துக்க கூடாது, ஒத்துக்கவேகூடாது என்று அழுத்தமாக சொல்கிறார். அவர்களுக்கு யார் என்று தெரியும் ஆனாலும் உண்மையை சொல்லவில்லை” என்று அந்த ஆடியோவில் கூறுகிறார்.
ஏழையாக இருந்தாலும் காவல்துறையின் பொய்க்கு பலியாகாமல் அறத்தின் உண்மையின் வழி நின்று கூறும் அந்த எளிய மக்களின் குரலை திரித்து வெட்டி ஒட்டி காவல்துறை தயாரித்துள்ள வீடியோவைஅவர்கள் தான் குற்றவாளிகள் என்று அனைத்து மீடியாக்களும் காட்சிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
அதுமட்டுமின்றி உண்மைக் குற்றவாளிகள் யார் என்றுm எதனால் இந்த சிக்கல் வந்தது என்றும் விரிவாகவே சம்பவம் நடந்த அந்த நேரத்தில் வழக்கறிஞர் ப.ப.மோகன் அவர்கள் விகடன் இணையத்திற்கு அளித்த நேர்காணலில் இதே இளைஞர்கள் பெயரைக் கூறி தான் பேசியுள்ளார்.காவல்துறையின் சாதிய நோக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளார். அதே போல #Roots Thamil YouTube channel கரிகாலன் அவர்கள் களத்தில் நேரடியாக நேர்காணல் செய்து உண்மைக் குற்றவாளிகள் யார் என்று அம்பலப்படுத்தினார். அந்த வீடியோ சாட்சியாக இருக்கிறது.
இத்தனை ஆதாரம் இருந்தும் சிபிசிஐடி எதற்காக அவசரம் அவசரமாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்? யாரைப் பாதுகாக்க? அரசியல் அழுத்தம் என்றால் பாஜகவின் சூழ்ச்சி இருக்கிறது என்றால் அதனை அம்பலப்படுத்த வேண்டியது தானே? அதற்கு குற்றத்தை மறைத்தால் உண்மை மறைந்துவிடுமா?
கந்தர்வக் கோட்டை, புதுக்கோட்டை சுற்று வட்டாரம் முழுவதும் சாதி ஆதிக்கம் மேலாங்கியுள்ள அப்பகுதியில் இறையூரை சேர்ந்த வெறும் 30 தலித் குடும்பங்கள் இவ்வாறான சம்பவத்தை செய்து சாதி ஆதிக்க பிரிவினர் மீது பழி போட்டுவிட்டு அவர்கள் அங்கு வாழந்து விட முடியுமா? இல்லை வாழத்தான் விடுவார்களா? இதுதானே எதார்த்தம். இவ்வாறிருக்க, எவ்வாறு இத்தகைய கொடூர செயலை செய்திருப்பார்கள்? என்ற கேள்வி வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, தான் குடிக்கும் குடிநீரில் தாங்களே மலத்தை கலந்து தாங்களே குடித்து பின் வெளியில் சொல்வார்களா? என்ன ஒரு முட்டாள்தனமான வாதம், சோடிப்பு? இதையே தான் தருமபுரி கிராமங்கள் கொளுத்தப்பட்ட போதும் “அவர்களே கொளுத்திக் கொண்டனர்” என்ற உண்மையற்ற செய்தியை சாதியவாதிகள் பரப்பினர்.
அதே வன் செயலை இன்று அரசு நிர்வாகமே செய்யத் துணிந்துள்ளது.

வேங்கை வயல் சிக்கல் இந்த சமூகத்தின் சிக்கல் இல்லையா? சிவில் சமூகத்தின் பொறுப்புக் கூறல் இல்லையா? காவல்துறையின் பொய் வழக்குகள் குறித்து அறியாதவர்களா என்ன?
தமிழக காவல்துறையும் அரசும் ஏற்றுக் கொள்ள முடியாத அநீதியை தலித் மக்களுக்கு பரிசளித்துள்ளது. அரசியல் நிர்பந்தம் காரணமாக இந்த வழக்கை முடிக்க வேண்டுமே என்ற காரணத்திற்காக எல்லோரும் நம்பும் படி பொது சமூகத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது காவல்துறை. ஏற்றுக் கொள்ள முடியாத அநீதி.நிச்சயம் உண்மை ஒருபோதும் மறையாது.சமூக முரண்பாட்டை சரி செய்ய வேண்டிய அரசு நிர்வாகமும் சாதியாகவே இயங்குகிறது என்பதற்கு வேங்கை வயல் ஒரு சாட்சி.
இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே அரசு அதிகாரிகள் சொல்லும் செய்தியை உண்மை என்று நம்பி பேசுவது ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் துரோகம். ஒரு அரச நிறுவனமே வன்கொடுமையை நீர்த்துப் போக செய்யும் பயங்கரவாத செயலை செய்துள்ளது.
தலித் மக்களின் மீது வன்முறை நிகழும் போதெல்லாம் உண்மையை திசை திருப்ப குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் பட்டியலின மக்களையே குற்றவாளியாக்குவது இன்று நேற்றல்ல காலமாக காலமாய் நடந்து வரும் ஒன்று.தலித் மக்களே வீடுகளை கொளுத்திக் கொண்டனர், அவர்களே மலத்தை கலந்து உள்ளனர். அவர்களே திருடினர், அவர்களே தவறு செய்துள்ளனர் என்ற தலித் விரோத குற்றச்சாட்டு தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதும் இன்று வேங்கை வயல் குற்ற சம்பவத்திலும் முத்திரை குத்தப்பட்டு இருப்பதும் நிரபராதிகள் தூக்கில் ஏற்றுவதற்கு சமமான ஜனநாயகமற்ற சமூக அநீதியானது. தமிழக அரசே! வேங்கை வயல் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டிக்குள் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மீண்டும் மறு விசாரணை செய்திடுக!
பாதிக்கப்பட்ட மக்களையே எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டு சுமத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!! வேங்கை வயல் சிக்கலை சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாற்றி பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவை தடுக்கும் வகையில் இறையூர் கிராமத்தை முற்றுகையிட்டு அச்சுறுத்தியும், எந்த நபர்களும் உள்ளே செல்ல முடியாமல் தடுத்துவரும் காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும்.
குற்றவாளிகள் யார் என்று கண்டறியாமலேயே குற்றவாளிகள் இவர்கள் தான் என்று 3 இளைஞர்களை காட்சிப்படுத்திய குற்றத்திற்கு தக்க இழப்பீட்டு வழங்கிட வேண்டும்.வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமலாக்கிட வேண்டும்.
