திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாச எங்கு உள்ளது? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பிய நிலையில், அது ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடை விதிக்க கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனு கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் கடந்த பல வருடங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைகால விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை,பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார். கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதை தொடர்ந்து, அவரது சீடர் அரச்சனா என்பவர், ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளார். அந்நாட்டிற்கு ஐநா சபையில் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார். இதை தொடர்ந்து, நீதிபதிகள், வழக்கறிஞர் மாற்றுவதற்கு அனுமதி வழங்கி , வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

நித்யானந்தா
பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இடையில் மீண்டும் நித்தியானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் நேரலையில் தோன்றி தான் உயிரோடு இருப்பதாக நித்தியானந்தா கூறி இருந்தார். கடந்த மார்ச் 30ம் தேதி யுகாதி விழாவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோவையும் வெளியிட்டது.
இந்த நிலையில் தான் தற்போது நித்தியானந்தா இருக்கும் தகவல் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.