chennireporters.com

வெளிநாட்டு மருத்துவக் கல்வியை இந்திய மாணவர்கள் நாடுவது ஏன்?

அ.அன்வர் உசேன்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாண வர்கள் உட்பட 18,000க்கும் அதிகமான  இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடக்கும் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.

இவர்களை மீட்பதில் வழக்கம் போல மோடி அரசாங்கம் பல குளறு படிகளையும் காலதாமதத்தையும் செய்துள்ளது.துரதிர்ஷ்டவசமாக நவீன் சேகரப்பா எனும் கர்நாடக மாணவர் போர் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இன்னொரு பஞ்சாப் மாணவரும் உயிரிழந்துள்ளார்.எனினும் இவரது உயிரிழப்புக்கு உடல்நிலை சரி யில்லாமல் இருந்தது காரணம் என கூறப்படுகிறது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவது சிக்க லாக மாறியுள்ளது.

ஒரு பகுதி மாணவர்கள் ஊர் திரும்பியிருந்தாலும் ஏராளமானவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மை கடமையாகும்.

இந்த பணிகளில் குறைகள் உள்ளன என்பதை மறைக்க மோடி அரசாங்க ஆதரவாளர்கள் உக்ரை னுக்கு கல்வி கற்க சென்ற மாணவர்களை இழிவு படுத்த தொடங்கியுள்ளனர்.

பிரதமரும் உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு அதுவும் உக்ரைன் போன்ற சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகளை தனியார் துறையினர் உருவாக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் இந்திய கல்விச் சூழல்களை புரிந்துதான் இவ்வாறு பேசினாரா எனும் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஏன் உக்ரைனுக்கு செல்கின்றனர்?தற்சமயம் சுமார் 7.7 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர். இவர்கள் தமது கல்விக்காக 28 பில்லியன் டாலர்கள் செலவிடுகின்ற னர் என மதிப்பிடப்படுகிறது.

வசதியான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்கா/கனடா/ ஆஸ்திரேலியா/ பிரிட்டன்/ சிங்கப்பூர் ஆகிய தேசங்களுக்கு கல்வி கற்க செல்கின்றனர்.

அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள கல்வி நிலையங்கள் உயர்தர கல்வி தருவது மட்டுமல்ல; படிப்புக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு தங்கி பணி செய்ய விசா தரப்படுகிறது.

பின்னர் குடியுரிமையும் கிடைக்கிறது. ஆனால் நடுத்தர குடும்பங்கள் மற்றும் ஓரளவு சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இத்தகைய தேசங்களுக்கு சென்று கல்வி  கற்கும் அளவுக்கு செலவு செய்ய இயலாது.

அவர்கள் குறிப்பாக மருத்துவக் கல்விக்கு  உக்ரைன்/ கஜகஸ் தான்/ பிலிப்பைன்ஸ்/ ரஷ்யா ஆகிய தேசங்களுக்கு செல்கின்றனர்.சமீப காலமாக சீனாவுக்கு செல்வதும் அதிகரித்துள்ளது.

இந்த தேசங்களுக்கு அதிக மாணவர்கள் செல்வ தற்கு காரணம் என்ன? இங்கு மருத்துவக் கல்விச் செலவு இந்தியாவின் தனியார் கல்லூரிகளைவிட குறை வாக இருப்பதுதான் .

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 313, தனியார் கல்லூரிகள் 293, மொத்தம் 596 கல்லூரிகள் உள்ளன.அரசு கல்லூரிகளில் 43,237 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 41,190 இடங்களும் ஆக மொத்தம் 84,427 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைவு.

கல்வியின் தரமும் அதிகம். தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகம். கல்வி முழுவதும் கற்பதற்கு  ரூ.75 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகிறது என மதிப்பிடப் படுகிறது.மேலும் விடுதிச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் கூடுதலாக ஆகின்றன.

இவ்வளவு தொகை செலவிடுவது நடுத்தரக் குடும்பங்களுக்கு சாத்திய மில்லை. அதே சமயம் உக்ரைன் போன்ற நாடுகளில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உட்பட ரூ .25 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகிறது.

இதனால்தான் மாணவர்கள் இந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.வெளிநாடுகளுக்கு  துரத்தும் நீட் தேர்வு இந்தியாவில் உள்ள 84,427 இடங்களுக்கு கடந்த ஆண்டு 16 லட்சம் பேர் நீட் தேர்வுகள் எழுதினர்.

அவர்களில் 8.7 லட்சம் பேர் தகுதி பெற்றனர்.ஒவ்வொரு இடத்துக்கும் 19 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு தனியார் கல்லூரிகளில்தான் இடம்  கிடைக்கிறது.

ஆனால் கட்டணம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர முடிவது இல்லை. இத்தகைய மாணவர்களுக்கு உக்ரைன்  போன்ற தேசங்கள்தான் இலக்காக அமைந்து விடுகின்றன.

அதே நேரத்தில் குறைவான நீட் மதிப் பெண்கள் பெற்றவர்கள் நன்கொடையும் அதிக கட்டணமும் தர தயாராக இருந்தால் “வெளிநாடு வாழ் இந்தி யர்கள்” போன்ற ஒதுக்கீடுகள் மூலம் இந்திய தனியார் கல்லூரிகளில் சேர்ந்துவிடுகின்றனர்.

உதாரணத்துக்கு நீட் தேர்வில் 420 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவர் தரவரிசையில் 4500வது இடத்தில் இருந்தார்.தனியார் கல்லூரி கட்டணக் கொள்ளை காரணமாக இந்தியாவில் சேர முடியாமல் உக்ரைன் சென்றார்.

ஆனால் 108 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று 25,000க்கும் அதிகமான தரவரிசையில் உள்ள இன்னொரு மாணவர் என்ஆர்ஐ கோட்டாவில் தனியார்  கல்லூரியில் சேர்ந்தார்.

ஏனெனில் அவர் வசதி படைத்தவர்; கல்லூரி கேட்கும் நன்கொடையும் அதிக கட்டணமும் தருவதற்கு சாத்தியம் உள்ளவர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெறுவதை நீட் தேர்வு உத்தரவாதம் செய்யும் எனவும் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறுவது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை இந்த சூழல் வெளிப்படுத்துகிறது.

உக்ரைன் போன்ற தேசங்களில் கல்விக் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்ல; இந்த தேசங்களில் தரப்படும் மருத்துவக் கல்வி ஐரோப்பா முழுவதும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரமும்  குறை வாக உள்ளதால் கல்வியின் தரமும் உயர்வாக உள்ளது.எனவேதான் நடுத்தரக் குடும்பங்களின் மாண வர்கள் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

நவீன் சேகரப்பா எனும் மாணவர் 97சதவீத மதிப்பெண்கள் பெற்றி ருந்தும் நீட் காரணமாக இந்திய தனியார் மருத்துவ கல்லூ ரியில்தான் இடம் கிடைத்தது.  கட்டணக் கொள்ளை காரணமாக தனியார் கல்லூரியில் சேர இயலாமல் நவீன் உக்ரைன் சென்றார்.

அங்கு உயிரிழந்தார்.உக்ரைன் போன்ற தேசங்களுக்கு செல்லும் மாணவர்களில் பெரும்பான்மையோர் பள்ளி மதிப்பெண்கள் 90சதவீதத்துக்கும் அதிகம் பெற்றிருந்தாலும் நீட் தேர்வுகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் காரணமாக தனியார் கல்லூரிகளில்தான் அவர்களுக்கு இடம் கிடைக்கிறது.

ஆனால் தனியார் கல்லூரிகள் நிர்ண யிக்கும் பெரும் கட்டணத்தைத் தர இயலாத காரணத் தால் அவர்கள் மருத்துவக் கல்விக் கனவை கைவிட வேண்டும் அல்லது உக்ரைன் போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் எனும் நிர்ப்பந்தம் உருவாகிறது.

நமது குழந்தைகளை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளு க்கு செல்ல நிர்பந்திப்பதில் நீட் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது.  நீட் கொடுமையானது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் தேவைஇந்திய மக்கள் தொகைக்கு மருத்துவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்பதை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்கும். 10,000 பேருக்கு சராசரி எண்ணிக்கை:
மருத்துவர்கள்         மருத்துவமனை 
                                                                 படுக்கைகள்
கியூபா                      84.2                         53
சீனா                          19.8                         43
பிரேசில்                   21.6                         21
தென் ஆப்பிரிக்கா 9.1                       23
இலங்கை                   10                        42
வியட்நாம்                 8.3                        32
இந்தியா                     8.6                        5
வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கூட இந்தியாவில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மிகக்குறைவாக உள்ளன.

இதனை அதிகரிக்க வேண்டும் எனில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதும் சுகாதாரத்துக்கு குறைந்தபட்சம் ஜி.டி.பி.யில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்வதும் மிக அவசியம் ஆகும்.

இது அரசு செய்ய வேண்டிய பணி.அரசு மருத்துவக் கல்லூரிகளை அதி கரிப்பதுதான் தீர்வாக அமையும். ஆனால் பிரதமர் தனி யாருக்கு அழைப்பு விடுகிறார். இதுபோகாத ஊருக்கு வழி! தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினால் அவர்கள் லாபம் ஈட்டவே முனைப்புக் காட்டுவர்.

இந்தியாவில் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.500 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது.இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யும் தனியார் அதனை மீட்டெடுக்க அனைத்து சட்ட ஓட்டைகளையும் பயன்படுத்துகின்றனர். கட்டணத்தை செங்குத்தாக உயர்த்துகின்றனர்.

இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் சேருவது சாத்தியமற்றதாகிவிடுகிறது.எனவே நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வியை தேடிச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனில் மருத்துவக் கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதும் மிக அதிகமாக மருத்துவக் கல்லூரிகளை அரசுத் துறையில் உருவாக்குவதும் மிக அவசியம்.

நீட் தேர்வை அகற்றுவதும் இன்றைய தேவை! மோடி அரசாங்கம் இதனை செய்யுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!

நன்றி தீக்கதிர் நாளிதழ்……..

இதையும் படிங்க.!