Chennai Reporters

கல்வி கட்டாயம் மாநில,ஒன்றிய பட்டியலில் இடம் பெற வேண்டும்.தி.மு.க.எம்.பி. வில்சன்.

“நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம், ஒரே கல்வி வாரியம் என்பவை வலதுசாரிகளின் கருத்துக் குழந்தை. அவர்கள் பன்முகக் கலாச்சாரமுள்ள இந்த நாட்டை ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள்”, என்று சாடுகிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்.

பெங்களூரிலிருந்து இயங்கிவரும் அரசியல் இதழ் தி நியூஸ் மினிட், வில்சனின் விரிவான நேர்காணலை வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழ் வடிவம் இங்கே:

திமுக மேலவை உறுப்பினர் பி.வில்சன் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஒரு தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதே வேளையில் முன்பிருந்ததைப் போல கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதிலும் அவருக்கு உடன்பாடில்லை.

கல்வியைப் பொறுத்த மட்டில் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இணையான அதிகாரம் இருக்க வேண்டும், ஒன்றியம் மாநிலங்களின் மீது எந்த மேலதிகாரமும் செலுத்தக் கூடாது என்கிறார் வில்சன்.

இதன் பொருள் என்ன? ஏன் வில்சன் இணையான அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்கிறார் ?

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% ஒதுக்கீட்டை அனைத்திந்திய மருத்துவ இடங்களுக்குப் பெற்றுத் தந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர் பி.வில்சன்.

இந்த வழக்குப் பிற்பாடு உச்ச நீதிமன்றத்திலும் வெற்றி பெற்றது. 2012 முதல் 2014 வரை சென்னை, கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய உயர் நீதிமன்றங்களின் கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

2014இல் பி.ஜே.பி.தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் இந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

தி நியூஸ் மினிட் நாளிதழுக்கு வழங்கிய விரிவான நேர்காணலில், நாடாளுமன்றத்தில் கல்வி குறித்து அவர் நிகழ்த்திய இடையீடுகள், ஏன் கல்வி மாநிலம்-ஒன்றியம் ஆகிய இரண்டு பட்டியல்களிலும் இருக்க வேண்டும்.

ஏன் போட்டித் தேர்வுகளால் தகுதியை நிர்ணயிக்க முடியாது என்பவைக் குறித்துப் பேசுகிறார். நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:

கேள்வி 1:

நீங்கள் கல்வி தொடர்பாக இரண்டு தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். முதலாவது ‘மருத்துவக் கல்வித் திருத்த மசோதா’, அடுத்தது, கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரும் மசோதா.

ஏன் மாநில அரசுகளுக்கு கல்வித் துறையில் ஒன்றிய அரசைவிட அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும்? கல்வியை நாடு முழுமைக்கும் மையப்படுத்துவதில் என்ன பிரச்சனை? பள்ளிக் கல்வியைப் பொறுத்த மட்டில் நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் இருப்பது நாட்டில் எல்லா மாணவர்களையும் ஒரே வரையறையின் கீழ் கொண்டுவரும் என்று சில கல்வியாளர்கள் சொல்கிறார்களே?

பதில்:
இரண்டு மசோதாக்களும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை. அவை இரு வேறு தளத்திலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவை. முதலாவது மசோதா 3.12.2021 அன்று என்னால் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘மருத்துவக் கல்விச் சட்டத் திருத்த மசோதா 2021’ என்பது அதன் பெயர். இந்த மசோதா பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு வேண்டாம் எனும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகிறது

கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மூன்றாவது பட்டியலில் 25ஆவது பிரிவில் வைக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது மாநில சட்டமன்றத்திற்குக் கல்வியின் மீது சட்டப்பூர்வமான அதிகாரம் இருக்கிறது. இதன் பொருள் மாநில அரசுக்கும் இந்த அதிகாரம் இருக்கிறது.

நீட் போன்ற நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்துவதென்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும். கூட்டாட்சித் தத்துவத்தையே அத்து மீறுவதாகும்.

இரண்டாவது மசோதாவை 4.2.2022 அன்று அறிமுகம் செய்தேன். அது அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் ஒத்திசைவுப் பட்டியிலில் உள்ள 25வது பிரிவை ரத்து செய்துவிட்டு, கல்வித் துறையில் மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணையான அதிகாரங்களை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதாகும். இந்தத் திருத்தத்தில் கோரப்பட்டிருக்கும் கல்வித்துறையின் கீழ் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் முதலானவை அடங்கும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஆசான்கள் கல்வித்துறை மாநிலக் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

ஆகவேதான் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது கல்வித்துறை மாநிலப் பட்டியலின் 11ஆவது பிரிவில் வைக்கப்பட்டது. 1976இல் நெருக்கடி நிலையின் போது கொண்டுவரப்பட்ட 42ஆவது திருத்தம்.

கல்வித் துறையை ஒத்திசைவுப் பட்டியலின் 25வது பிரிவுக்குக் கொண்டு வந்தது. இது சர்தார் சுவரண் சிங் கமிட்டி வழங்கிய அறிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட, அதன் நிதி உதவி பெறுகிற கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் அனுமதியை ஒழுங்குபடுத்துவதில் ஒன்றிய அரசுக்கு உள்ள பங்கை மறுக்க முடியாது.

ஒன்றிய அரசு எய்ம்ஸ் போன்ற கல்வி நிலையங்களை நிறுவி இருக்கிறது. கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளை ஒன்றிய அரசு எப்படி நிறுவி, நிர்வகித்து வருகிறதோ, அதைப் போலவே இந்த நிலையங்களையும் நிர்வகிக்க வேண்டும்.

கல்வித்துறையை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றியதன் மூலம் பாராளுமன்றம் அந்தத் துறையில் கூடுதல் அதிகாரத்தை சுவிகரித்துக் கொள்கிறது. இதனால் தனது சொந்த நிதியில் நிறுவிய கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலுங்கூட மாணவர்களை அனுமதிக்கும் உரிமை மாநில அரசின் கைகளிலிருந்து பறிபோகும் அபாயம் நேர்கிறது.

நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம் மருத்துவக் கல்லூரி அனுமதிகள் முழுமையாக மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டது இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பல மாநிலங்கள் இந்தியா விடுதலையான காலத்திலிருந்தே தொழில்நுட்ப, மருத்துவக் கல்வித் துறைகளில் கணிசமான முதலீடு செய்து வருகின்றன.

அதன் பலன் காணக்கூடியதாக இருக்கிறது. பல மாநிலங்களில் கற்றோரின் விகிதம் அதிகமாக இருப்பதற்கு அவை கல்வி சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கணிசமான நேரத்தையும் பொருளையும் செலவிட்டு வருவதுதான் காரணம்.

ஆனால், திடீரென்று மாநிலங்களின் சம்மதமின்றி நீட் தேர்வை நுழைத்தது ஒன்றிய அரசு; இதனால் மாநிலங்களால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களில் மாணவர்களை அனுமதிக்கும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

கல்வித் துறையைப் பொருத்த மட்டில் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் ஒத்த கருத்து இருப்பதில்லை. மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் கொள்கையோடு முரண்படுகிறது.

ஒன்றிய அரசின் கொள்கைகளின்படி இடங்கள் வழங்கப்படும்போது அது மாநிலத்தில் கற்றோர் விகிதத்தைப் பாதிக்கிறது.

கல்விச் சாலைகளை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும், நிதி வழங்குவதற்குமான அனுமதியை ஒன்றிய அரசுக்கு வழங்கலாம்.

ஆனால் கல்விக் கொள்கையை வகுப்புதற்கான முழு சுதந்திரம் மாநில அரசுக்கு இல்லையென்றால், மாநிலத்தின் அடையாளமான கல்வி, மொழி ஆகியவற்றின் வளர்ச்சி அதற்கு எட்டாக் கனியாகவும் கானல் நீராகவுமே இருக்கும்.

பள்ளிக் கல்விதான் ஒரு மனிதனது அடிப்படையைக் கட்டமைக்கிறது. ஆதலால்தான் ஒவ்வொரு மாநிலத்தின் கல்விக் கொள்கையும் மாறுகிறது. மாநிலங்கள் தத்தமது கலாச்சாரம், அடையாளம், மொழி, வரலாறு ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பிக்க விழைகிறது.

ஆனால் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு வந்ததன் மூலமும், தேசிய கல்விக் கொள்கை போன்ற ஒற்றைநோக்குத் திட்டங்கள் மூலமும், அது இந்தியாவின் பெருமைக்குரிய வேறுபட்ட குணநலன்களை அழிக்கிறது.

“ஒற்றைக் கல்விக் கொள்கை” என்பது கல்வித் துறையில் செல்லுபடியாகாது. நமது கல்விக் கொள்கை பரந்து விரிந்ததாக இருக்க வேண்டுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடையதாக இருக்கக்கூடாது.

இப்போது மாநில அரசு பள்ளிக் கல்விக் கொள்கையை வகுத்தாலும், அதைப் பாராளுமன்றம் புதிய சட்டமியற்றி மாற்றவிட முடியும். மாநில அரசின் கல்விக் கொள்கை ஒன்றிய அரசின் கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தால், குடியரசுத் தலைவர்.

தனது ஒப்புதலை நிறுத்தி வைப்பதன் மூலம், மாநில அரசின் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியும்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் , ஒரே கல்வி வாரியம் என்பவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி உள்ளிட்ட வலதுசாரிகளின் கருத்துக் குழந்தை. இவர்கள் பன்மைத்துவத்தால் பெருமையுடன் விளங்கும் நமது நாட்டை ஒற்றை முகமுள்ள ஒரு தேசமாக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அவர்கள் உருவாக்கிய சி.பி.எஸ்.இ கல்வித் திட்டத்தால் தொலைதூரக் கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை. இதில் ஒன்றிய அரசு பரிதாபமாகத் தோற்றுவிட்டது. ஒன்றிய அரசு நிறுவிய கே.வி.

பள்ளிகள் நகரங்களில் மட்டுமே நிறுவப்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசுக்கு மக்கள் கல்வியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் அவர்கள் நாடெங்கிலும் தமது கல்வி நிலையங்களை நிறுவ வேண்டும்.

மாறாக அவர்கள் ஏற்கனவே மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து நிறுவிய, நிர்வகித்து வரும் பள்ளிகளில் தங்கள் கொள்கைகளைத் திணித்து அவற்ற ஒற்றைமய மாக்குகிறார்கள்.

இது மாநில அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் கல்வி சார்ந்த உரிமையில் அத்துமீறித் தலையிடுவதாகும்.

கேள்வி 2:
நீட் தேர்வு கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியும் பல கல்வியளர்களும் இப்போதையத் தமிழக அரசும் ஏன் நீட் அநீதியானது என்று விளக்கியிருக்கிறார்கள். பொதுவாக, நுழைவுத் தேர்வுகளைக் குறித்த உங்கள் கருத்து என்ன? அவை பலன் தருமா?

பதில்:
பொது நுழைவுத் தேர்வுகளால் தகுதி- திறமையை நிர்ணயிக்க முடியாது என்பதுதான் என் கருத்து.

2006ஆம் ஆண்டில் அப்போதையத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பொது நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என்று முடிவெடுத்தபோது, ‘தமிழகத் தொழிற் கல்விநிலைய அனுமதிச் சட்டம், 2006’ என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இதற்கு 3.3.2007 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்தச் சட்டத்தின் வாயிலாக, 2007-2008 கல்வியாண்டு முதல் மேனிலைப்பள்ளித் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு ஆதரவாக அமைந்தது. பொது நுழைவுத் தேர்வுகளால் தகுதியை நிர்ணயிக்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டது உயர்நீதிமன்றம். வழக்கு உச்சநீதிமன்றத்திற்குப் போனது.

உச்சநீதிமன்றமும் சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டம் 2007 முதல் 2017 வரை அமலில் இருந்தது. 2017ல் பொது மருத்துவத்திற்கும் பல் மருத்துவத்திற்குமான அனுமதிச் சட்டத்தில் பிரிவு 10D சேர்க்கப்பட்டது.

அது வரை தமிழக அரசின் 2006 சட்டத்தின்படிதான் அனுமதி வழங்கப்பட்டது சமீபத்திய உச்சநீதிமன்ற வழக்கான ‘நெயில் ஆரிலோ -எதிர் -இந்திய ஒன்றியம்’ வழக்கில் நான் வாதாடினேன்.

மாநில இடங்களுக்குள் ஒதுக்கப்படும் அனைத்திந்திய இடங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடங்கள் வழங்கப்படவேண்டும் என்கிற எனது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தனது தீர்ப்புரையில் பல இடங்களில் நுழைவுத் தேர்வு தகுதியை நிர்ணயிக்காது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

ஆகவே நீட் எனும் வடிவம் எடுத்திருக்கும் இந்தப் பொது நுழைவுத் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் செல்வம் கொழிக்கின்றன. மக்களுக்கு இதனால் வேறு பயனில்லை.

நீட் தேர்வு மாணவர்களை ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல், தேர்வு முறைகேடுகள் முதலான பல குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. மேலும் இந்தத் தனியார் பயிற்சி மையங்களுக்குக் கொட்டிக் கொடுப்பதால் பல குடும்பங்கள் பற்றாக்குறைக்கும் இன்னும் பல சிரமங்களுக்கும் உள்ளாகிறார்கள்.

கேள்வி 3:
இப்போது கூட்டாட்சிக்கு வருவோம். ஒத்திசைவுப் பட்டியல் தேவைதானா? அப்படியானால் அந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டியவை எவை? மாநிலங்களின் பொறுப்பில் இடம் பெற வேண்டியவை எவை? ஒன்றியத்தின் பொறுப்பில் இடம் பெற வேண்டியவை எவை?

பதில்:
ஒத்திசைவுப் பட்டியலில் சில அதிகாரங்கள் இருக்கின்றன. இதில் மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் சட்டமியற்ற முடியும். ஆனால் பிரிவு 246-இன்படி பாராளுமன்றத்திற்குத்தான் மேலதிகாரம் இருக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஆசான்கள் மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று கருதினார்கள்.

அதனால்தான் இந்தப் பட்டியலுக்கு ஒத்திசைவுப் பட்டியல் என்று பெயர் வைத்தார்கள். நீதியரசர்களை நியமிக்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் “ஒத்து” என்கிற சொல்லை நீதித்துறையின் ஒப்புதல் என்பதாக விரித்துரைத்தது.

ஆகவே ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள அம்சங்களில் ஒன்றியத்திற்கு மேலதிகாரம் இருந்தாலும், அது மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்.

முழுமையும் ஒன்றியத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒன்றியப் பட்டியலில் (பட்டியல்-1) வரும் அம்சங்களைப் போல ஒத்திசைவுப் பட்டியல்( பட்டியல்-3) அம்சங்களில் நடந்து கொள்ளக்கூடாது.

அதாவது, தவிர்க்க முடியாத விதிவிலக்கான சூழல்களைத் தவிர மற்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் அக்கறை உள்ள அம்சங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் இடம் பெறும். எவையெல்லாம் இப்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கின்றன? தொழிற் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வித்துறை, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு, குற்றச் சட்டம், விலங்குவதை எதிர்ப்புச் சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம் முதலான பல சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் வருகின்றன.

இந்தப் பட்டியலில் உள்ள அம்சங்களில், ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்திற்கும், பாராளுமன்றமும் நிறைவேற்றும் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடு இருக்குமானால், இப்போதைய விதிகளின்படி பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டமானது சட்டமன்றம் நிறவேற்றும்.

சட்டத்தைத் தாண்டி மேலாதிக்கம் செலுத்த வல்லது. இந்தச் சிக்கல் வராமல் இருக்கத்தான் மாநிலங்களவை உருவாக்கப்பட்டது. பிரிவு 263-இன் கீழ் மாநிலங்களின் கவுன்சில் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடுகளைத் தீர்ப்பதுதான் இதன் நோக்கம். ஆனால் சமீப காலமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் குரலைக் கேட்க மறுக்கிறது.

பெரியண்ணன் மனோபாவத்துடன் நடந்து கொள்கிறது. மாநிலங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து அலட்சியம் செய்கிறது.1950 முதல் ஏழாவது அட்டவணை பல திருத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ஒன்றியப் பட்டியலும் ஒத்திசைவுப் பட்டியலும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. மாநிலப் பட்டியல் தேய்ந்துகொண்டே போகிறது.

இது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே நீர்த்துப் போகச் செய்கிறது.பிஜேபி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், ஒத்திசைவு அம்சங்களில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லா அதிகாரங்களும் ஒன்றியத்தின் கைகளில் சேர்வதற்கு வகை செய்து கொண்டது.

ஒன்றியம் மூர்க்கத்தோடு செயல்பட்டது, ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள அம்சங்களில் எல்லா அதிகாரங்களையும் ஒன்றியமே சுவீகரித்துக் கொண்டது.

இதானால் மாநிலங்களுக்கும் அதன் சட்டமன்றங்களுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் போனது. அதாவது ஒத்திசைவுப் பட்டியல் ஒன்றியத்தின் பட்டியல் ஆகியது.

பிஜேபி அரசு அத்துடன் சமாதானமாகவில்லை. வேளாண்மை, அணைக்கட்டு முதலான மாநிலப் பட்டியலிலும் (பட்டியல்-2) தனது கைகளைக் கடத்தியது, மாநிலங்களின் பிரத்யேக அதிகாரத்திலும் ஊடுருவியது.

இத்துடன் முடியவில்லை. ஒத்திசைவுப் பட்டியலில் மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதாவை ஆளுநர்களைப் பயன்படுத்தி அவற்றைத் திருப்பி அனுப்புகிறது, அல்லது ஒப்புதல் வழங்க மறுக்கிறது, அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் நாட்களைக் கடத்துகிறது.

மாநில உரிமைகளுக்கு உட்பட்ட அம்சங்களில் மாநிலத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றம் ஒரு மனதாக மசோதா இயற்றியது.

ஆனால் அது நிறைவேறாமல் இருப்பதற்கு பிஜேபி அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்குதான் காரணம்.

முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் மாநில சுயாட்சியையும் கூட்டாட்சியையும் ஒன்றிய அரசிடம் முன்மொழிந்தவர்களில் முதலாமவர்.

“ஒன்றிய அரசு நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டு மற்ற அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கிவிட வேண்டும்” என்று 1967-இலேயே பேசியவர் அறிஞர் அறிஞர் அண்ணா.

இதன் தொடர்ச்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி செப்டம்பர் 1969-இல் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்று பரிசீலிப்பதற்காக பி.வி.ராஜமன்னார் கமிட்டியை நியமித்தார்.

கமிட்டி, 1971-இல் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஒத்திசைவுப் பட்டியலில் (பட்டியல் 3) உள்ள பிரிவுகள் 5, 8, 17, 19, 22, 23, 24, 25, 28, 30 முதல் 40, மற்றும் 42 ஆகிய பிரிவுகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்து கமிட்டி.

மேலும் மாநில உரிமைகளைப் பாதிக்கிற சட்டங்களை முதலில் மாநிலங்களின் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும், சட்ட வரைவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறபோதே மாநிலக் கவுன்சில் வழங்கிய கருத்துரையும் உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

என்றும் பரிந்துரைத்தது ராஜமன்னார் கமிட்டி. மாநிலக் கவுன்சிலின் கருத்துரை ஒன்றியத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும், ஏதேனும் காரணத்தால் ஒன்றிய அரசு கவுன்சிலின் கருத்துரையிலிருந்து மாறுபட்டால் .

அதற்கான காரணங்களும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் கூறியது கமிட்டி. மேலும் பி.வி.ராஜமன்னார் கமிட்டி ஒட்டுமொத்த நாட்டு நலனுக்கு அவசியமான அம்சங்கள் மட்டுமே ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

என்றும் மற்றவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் கோரியது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த திரு.கே. சந்தானம் ஒத்திசைவுப் பட்டியல் விரிவாக்கப்படுவதற்கு எதிராக எழுப்பிய ஆட்சேபணைகளையும் கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியது.

பி.வி.ராஜமன்னார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகச் சட்டப் பேரவை.

ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கை மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிப்பது குறித்த விழிப்புணர்வை மற்ற பல மாநிலங்களிலும் உண்டாக்கியது. ஆனால் ஒன்றிய அரசு ராஜமன்னார் அறிக்கையைப் புறக்கணித்து விட்டது.

இந்தச் சூழலில், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிறகு ஒன்றிய அரசு சர்தார் சுவரண் சிங் கமிட்டியை நியமித்தது. இந்தக் கமிட்டியின் அறிக்கை 1976-இல் வெளியானது. இதன் அடிப்படையில்தான் 42-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

42ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஏழாவது அட்டவணையில் பல மாற்றங்களை வருத்தியது. பட்டியல்- 2இல் முக்கியப் பிரிவுகளான பிரிவு 11 (கல்வி), 19 (வனம்), 20 (வனவிலங்குகள் பறவைகள்), 29 ( நீட்டல்- நிறுத்த அளவைகள்) முதலானவை பட்டியல்-2இல் இருந்த நீக்கப்பட்டு பட்டியல்-3க்கு மாற்றப்பட்டன.

இது மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்கும் அதிகாரத்தை டில்லியில் குவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கை.

அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி ஒன்றிய- மாநில உறவுகளைப் பரிசீலிப்பதற்காக 1983-இல் சர்க்காரியா கமிஷனை நிறுவினார்.

கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்று, மாநில அரசு, பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அவர் 30 நாட்களுக்குள் அதன் மீது முடிவெடுக்க வேண்டும்.

தொடர்ந்து பதவிக்கு வந்த எந்த ஒன்றிய அரசும் சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகச் சட்டமன்றம் சிறப்புக் கூட்டமொன்றை நடத்தியது.

அதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளையும் கூட்டாட்சி விழுமியங்களையும் வலியுறுத்தினார். அப்போது அவர் தெளிவாகச் சொன்னார்:

” ஜனநாயகத்தின் மாண்பைப் பேணுவதற்காகவும், கூட்டாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகவும், கல்வி உரிமைகளை நிலை நாடுவதற்காகவும்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.”

ஆக, மாநில அரசாலும் அதன் ஆதரவிலும் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகள் பேணப்பட வேண்டும். தான் நிறுவிய கல்வி நிலையங்களில் ஒன்றிய அரசுக்கு அதே விதமான தன்னாட்சி உரிமை இருக்க வேண்டும்.

அப்படியான முதிர்ந்த பகுப்புணர்வு ஒன்றிய- மாநில அரசுகளிடையே உண்டாகும் என்றுதான் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நமது முன்னோடிகள் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஆனால் ஒன்றிய அரசோ, மாநில அரசு நிறுவிய, நிர்வகிக்கிற கல்வி நிலையங்களிலும் தனது மேலாதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆகவேதான் நான் முன்மொழிந்திருக்கிற தனி நபர் மசோதாவில் கல்வித் துறையில் ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறேன்.

ஆகவே, தேசிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் அம்சங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களைப் பாதிக்கும் அம்சங்களிலும் ஒத்திசைவுப் பட்டியல் அவசியமானதுதான். மற்ற அம்சங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

அதுதான் மாநிலங்களின் தன்னாட்சியைப் பாதுகாக்கும். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நாம் மறக்கலாகாது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மாநிலங்கள் இணைந்து ஒன்றியத்தை உருவாக்குகிறது.

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் முதலான கோட்பாடுகள் மாநில உரிமைகளைத் தாழ்த்தி, ஒன்றியத்தின் அதிகாரக் குவியலுக்கு இட்டுச் செல்லும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.

அப்படிச் செய்வது வேற்றுமையில் ஒற்றுமை எனும் சித்தாந்திற்கும் கூட்டாட்சிக்கும் அடிக்கப்படும் சாவு மணியாக அமைந்துவிடும்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!