chennireporters.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊர்வசி ரவுடேலா.. அணிந்து வந்த ரூ. 200 கோடி வைர நெக்லஸ்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘முதலை நெக்லஸ்’ அணிந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

2023ம் ஆண்டுக்கான 76வது கேன்ஸ் திரைப்பட விழா மே 16ல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த சினிமா பிரபலங்கள் பங்கேற்று, சிவப்பு கம்பளத்தில் கேட்வாக் செய்து வருகின்றனர். இந்தாண்டு இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் கேன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமான ஊர்வசி ரவுடேலா, பிங்க் நிற கவுனுடன், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முதலைகளின் வடிவத்தில் உள்ள கார்டியரின் நேர்த்தியான நெக்லஸ் அணிந்து பங்கேற்றார்.

ஏற்கனவே ஒருமுறை கேட்வாக் செய்த போது ஊர்வசியை, நடிகை ஐஸ்வர்யாராய் என சில ஊடகங்கள் தவறுதலாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், ஊர்வசியின் வினோதமான நெக்லஸ் தேர்வு குறித்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் சிலர் ஊர்வசி, பல்லிகள் அணிந்திருப்பதாக கேலி செய்தனர்.

இரட்டை முதலை நெக்லஸின் மதிப்பு ரூ. 200 கோடி என்றும், நெக்லஸ் தங்கம், வைரங்கள் மற்றும் மரகதங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேலி குறித்து ஊர்வசி, ‘நெக்லஸ் குறித்து சரியான தகவல் இல்லாதவர்கள், வினோதமான கருத்துக்களை எழுதுகின்றனர். ஆனால், நகையில் உண்மையான வரலாற்றைப் பற்றி அறிந்தவர்கள், முதலை நெக்லஸை முற்றிலும் விரும்புவார்கள்.

உண்மையில், இது ஒரு வரலாற்று சின்னம். நீங்கள் அதைப் பற்றி படிக்க வேண்டும். இதைப் பற்றி எனக்குத் தெரியாது,

ஆனால் 2006ம் ஆண்டு கேன்ஸில் மோனிகா பெலூசி இதை அணிந்திருந்தார் என்பதை அறிவேன். அதைப் பற்றி எனக்கு முற்றிலும் தெரியாது.’ இவ்வாறு அவர் கூறினார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார்டியர் வடிவமைத்த, முதலை நெக்லஸ் அதன் மிகவும் புகழ்பெற்ற முக்கிய தயாரிப்புகளில் பிரபலமான ஒன்றாகும். இது இரட்டை முதலைகள் பின்னிபிணைந்த நெக்லஸ், 1975ல் தயாரிக்கப்பட்டது.

ஒரு முதலை ’18 காரட் மஞ்சள் தங்கம் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட சிறிய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பரமான மஞ்சள் வைரங்களில்’ வடிவமைக்கப்பட்டதாக 2018ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதில் உள்ள வைரங்களின் எடை சுமார் 60.02 காரட். மற்றொன்று 66.86 காரட் கொண்ட 1,060 மரகதங்கள் கொண்ட 18 காரட் வெள்ளைத் தங்கத்தில் செதுக்கப்பட்டது.

ஊர்வசியைத் தவிர, இத்தாலிய நடிகை மோனிகா பெலூசியும் கார்டியரின் முதலை நெக்லஸ்களை கேன்ஸில் 2 முறை நெக்லஸை அணிந்துள்ளார்.

2006ல் ஒரு பதிப்பையும், 2019ல் நெக்லஸின் மற்றொரு பதிப்பை அவர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!