chennireporters.com

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எடப்பாடி பழனிச்சாமியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் சிபி.எம். வலியுறுத்தல்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து – அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுப்பதுடன் உரிய குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

அத்துமீறி கொலை செய்வது, உயர் அதிகாரிகளின் ஆணைப்படி செய்யப்பட்டாலும் கூட கொலைக் குற்றமாகவே கருதப்பட வேண்டும். எனவே போராடிய மக்களின் மீது சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரது மரணத்திற்கும், பலரது உடல் உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், பலர் மீதான பொய் வழக்குகளுக்கும் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள், அந்த குற்றங்களுக்கு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது.

இத்தகைய உயிரிழப்புகளுக்கும், அமைதி குலைவிற்கும், முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும் அன்றைய அதிமுக அரசு மற்றும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். எனவே, முற்றிலும் பொறுப்பற்ற முறையில் தனக்கு எதுவும் தெரியாது என்று ஊடக சந்திப்பில் அப்பாவி போல பேசி, இந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்துள்ளார். தனது பொறுப்பினை மூடி மறைக்கும் நோக்கிலேயே எடப்பாடி அரசு கடைசி வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் மீது சிறு நடவடிக்கை கூட மேற்கொள்ளாமல் அவர்களை பாதுகாத்து வந்துள்ளார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி இக்குற்றங்களுக்கு முழு பொறுப்பாக்கப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர், இத்தனை வன்மத்தோடு முன்னெடுத்த தாக்குதலுக்கும், தங்களுடைய வரம்பை மீறிச் செயல்பட்டதற்கும் நோக்கங்களும் காரணங்களும் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. ஆஷிஸ்குமார் ஐ.ஏ.எஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ‘இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா’ என்று கேள்வி எழுப்பி, வேறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திட பணித்ததை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனவே, அதிகாரிகள் தவறு இழைப்பதற்கும், வரம்பினை மீறி செயல்பட்டதற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பின்னணியும், தலையீடும் இல்லையென்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அத்தகைய ஸ்டெர்லைட் நிர்வாகத்தை பற்றி, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. ஸ்டெர்லைட் உட்பட, மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை தங்களுடைய கட்டுக்குள் கொண்டுவந்து சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமாக மாறியுள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்க தமிழ்நாடு அரசு தேவையான, சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் காவல்துறையினர் திருப்பி தாக்கினார்கள்’ என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிரபலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். திரு. ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம்.

பசுமை வளாகம் அமைக்க மறுத்தது, தாமிர தாது கொண்டு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளை மறுத்தது, நச்சுக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் மண்ணையும், காற்றையும், நீரையும் மாசு படுத்தும் விதத்தில் கொட்டியது. தங்களது நிறுவன கழிவு நீரை பொது ஓடையில் கலக்கச் செய்தது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பிலும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் சார்பிலும் பல முறை அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்த பிறகும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்த போராட்டம் நடைபெறுவதற்கான காரணமாக அமைந்தது. எனவே முறையான நடவடிக்கைகள் எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் மீது உரிய துறைவாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

14 உயிர்கள் கொல்லப்படுவதற்கும், சட்டம் ஒழுங்கு குலைவதற்கும் முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படுவதற்கும் தமிழ் நாட்டின் பெருமை குலைவதற்கும் இட்டுச் சென்ற மிக மோசமான சம்பவம் இது என்பதால் ஆரம்பம் தொட்டு அதன் காரணங்கள் ஆராயப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் எதிர்காலத்தின் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாமலிருக்க உரிய வழிமுறைகளை தமிழ் நாடு அரசாங்கம் உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கேட்டுக்கொள்கிறது.

ஒரு மாவட்டத்தில், ஒரு தொழில் நிறுவனம் உருவாக்கப்படுகிறபோது அந்த மாவட்ட மக்கள் நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை அளிக்கிறார்கள். அதுமட்டுமின்றி எவ்வளவு பாதுகாப்பான தொழிலாக இருந்தாலும் மாசுபடுதல் தவிர்க்கவே முடியாதது. அதையும் அந்த பகுதி மக்களே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அன்றாட பணிகளுக்கும், ஒப்பந்தப் பணிகளுக்கும் வெளி மாநிலத்தவரை பயன்படுத்தியதும் உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையும் கணக்கிலெடுத்து தொழிற்சாலை உருவாக்கப்பட்டால் அதில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை உத்திரவாதப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

இதையும் படிங்க.!