IPL 2023: CSK vs RR | கடைசி பந்தில் வெற்றியை பறித்த சந்தீப் சர்மா – 3 ரன்களில் சென்னை தோல்வி
சென்னை: 16ஆவது ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
176 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு இம்முறை கெய்க்வாட் விரைவாகவே அவுட் ஆனார். கடந்த சில போட்டிகளாக அசத்தல் பார்மில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் இப்போட்டியில் 10 ரன்களுக்கு சந்தீப் சர்மா பந்தில் விக்கெட் இழந்து முதல் ஆளாக பெவிலியன் திரும்பினார். இதன்பின் டெவான் கான்வே உடன் இணைந்து அஜிங்க்யா ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
68 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த இக்கூட்டணியை பிரிக்க சஞ்சு சாம்சன் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இறுதியில் அஸ்வின் அதை செய்துமுடித்தார். 31 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக்க, அதன்பின் வந்த சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.
ஷிவம் துபே 8 ரன்கள், மொயின் அலி 7 ரன்கள், அம்பதி ராயுடு 1 ரன் என அடுத்தடுத்தது ராஜஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்கள் சுழலில் சிக்கி ஒவ்வொருவராக நடையைக்கட்டினர். அதுவரை பொறுப்பாக ஆடிவந்த கான்வேவும் அரைசதம் அடித்த கையோடு சஹால் பந்துவீச்சில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இறுதியில், சென்னை அணியின் ஆட்டம் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா கைகளில் வந்தது. இருவரும் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாசி வெற்றியை நெருங்கினர். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, தோனி பேட்டிங் செய்தார். அழுத்தத்தில் முதல் இரு பந்துகளையும் வொயிடாக வீசிய சந்தீப் சர்மாவின் இரண்டாவது பந்தை சிக்ஸராக பறக்கவிட்டார் தோனி.
4 பந்தில் 13 ரன்கள் என்ற நிலையில் மீண்டும் ஒரு சிக்ஸர் விளாசி மைதானத்தை ஆர்ப்பரிக்க செய்தார் தோனி. அடுத்த பந்தில் தோனி சிங்கிள் எடுக்க, ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார். அவர் சிங்கிள் எடுக்க ஒரு பந்தில் சிக்ஸ் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்தார்.
கடைசி பந்தில் தோனியிடம் இருந்து சிக்ஸை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறை ஏமாற்றமே கிடைத்தது. கடைசி பந்தை யார்க்கராக வீசி சென்னை அணியின் வெற்றியை தட்டிப் பறித்தார் சந்தீப் சர்மா. சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தோனி 32 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அஸ்வின், சஹால் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்: சென்னை சேப்பாக்கத்தின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரின் 3வது பந்திலேயே அவுட்டாகி 10 ரன்களுடன் வெளியேறினார். ஜோஸ் பட்லருடன், தேவ்தட் படிக்கல் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 8 ஓவர் வரை தாக்குப்பிடித்த அவரும், ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி 38 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன்கள் எதுவும் எடுக்காமல் போல்டானார். அஸ்வினும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் 30 ரன்களுடன் கிளம்பினார்.
தனியொரு ஆளாக நிலைத்து ஆடிய பட்லர் 52 ரன்களுடன் கிளம்ப 17-வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். துருவ் ஜூரல் 4 ரன்களுடன் சுருங்கிவிட, கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் (0), ஆடம் ஜம்பா அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 175 ரன்களை சேர்த்தது. ஷிம்ரோன் ஹெட்மேயர் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோயின் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.