chennireporters.com

ஈரோடு இடைத்தேர்தல் – மலராத தாமரை, துளிராத இலை வீதியில் நிற்கும் அதிமுக.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்து, ஒதுங்கிக் கொள்ள, பிற கட்சிகளின் நிலையும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமும் தான் தற்போது தமிழக அரசியலில் பரபரக்காக பேசப்பட்டு வருகிறது.

அதிமுகவிற்குள் பிரிவுகள், பிளவுகள் ஒருபக்கம் இருந்தாலும், வரும் 2024ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றனர் அதிமுக தலைவர்கள் சிலர் .

அதிமுக பெரிய கட்சி, அந்த கட்சி தலமையில்தான் கூட்டணி என்று வழிமொழிந்தார், தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஒருங்கிணைந்த அதிமுகவே பலம் என்று சொல்லி ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், கூட்டணிக்குள் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். அதிமுக சார்பில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இருவரும் தனித்தனியாக தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் தனித்தனியாக கேட்டும் வருகின்றனர்.

திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் இடம் பெறுவோம் என்று சொன்ன டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளரை அறிவித்து, தனித்து களமிறங்கி விட்டது. கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக தற்பொழுது போட்டியும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது. எந்த கூட்டணியிலும் இல்லை என்று சொல்லி விட்ட தேமுதிகவும் வேட்பாளரை அறிவித்து தனித்து போட்டியிடுகிறது. புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளோ எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பாஜக எடுக்கும் முடிவிற்கு ஆதரவு என்றும் தெரிவித்துள்ளன

இரட்டை இலை சின்னம் யாருக்கோ அவர்களுக்கு ஆதரவு…, ஓபிஎஸ்க்கு ஆதரவு, இபிஎஸ்க்கு ஆதரவு என்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளுக்கொரு நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, தனித்து போட்டியா? அல்லது யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு என்று ஓபிஎஸ் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பாஜக முடிவு என்ன? இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து ஆதரவளிக்கலாம். அவர்கள் இணையவில்லை என்றால் நாமே களமிறங்குவோம், யாருக்கும் ஆதரவின்றி அமைதி காப்போம், என்றெல்லாம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

 

ஆனால், அடுத்த ஆண்டை மனதில் கொண்டு, டெல்லி மேலிடத்தின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. கொஞ்சம் பொறுமையா முடிவு செய்யலாம் என்பதால், முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது பாஜக என்கிறார்கள். இந்நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று பிற்பகல் (30ம் தேதி) நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது.

மெகா கூட்டணி என்று சொன்ன ஓரிரு மாதத்தில், ஒரே கட்சிக்குள் இரண்டு அணிகள். கூட்டணியில் இருந்த கட்சிகள் தனித்தனி நிலைப்பாடு என்று அதிமுக கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.

இந்த நிலை அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் வரை தொடருமோ என்கிற கலக்கத்தை சீட்டைக் குறி வைத்து காத்திருக்கும் அதிமுக மற்றும் கூட்டணியின் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் டெல்லி மேலிடத்தின் கண்ணசைவில் உரிய நேரத்தில் நடக்கும் என்கிறார்கள். மேலிடத்தின் பிடி இறுகுமா? தளருமா?  மீண்டும் ஓரணியில் வருமா கூட்டணிக் கட்சிகள்? ஓரிரு நாட்களில் தெரியும்.

இதையும் படிங்க.!