chennireporters.com

ஆளுநர் “ட்விட்” டென்ஷனில் திமுக.

எதிர்வினைக்காக ஏங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி!!!
அண்ணாமலையும் பாஜக ஆதரவு முன்னாள் ராணுவத்தினர் சிலரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டது குறித்து மனு அளித்தனர்.

அது பற்றி ராஜ்பவன் தமிழ்நாடு என்ற ஆளுநரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “மாநில அரசு சட்டம் ஒழுங்கு அமல்படுத்துவதில் மெத்தனமான இருக்கிறது” என ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

 

“சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மெத்தனம், திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுதக் கும்பல் கொலை செய்தது” என்று கடந்த ஒரு வாரமாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பரப்பிய அவதூறை ஆளுநர் ரவியும் பதிவு செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

ஆளுநர் பதவி வேறு, பாஜக தலைவர் பதவி வேறு என்பதை உணர்ந்து தெளிந்து செயல்படுங்கள் என ஆர்.என்.ரவிக்கு திமுக கூட்டணி தலைவர்களும், ஆளுங்கட்சி பிரதிகளும் பலமுறை அறிவுரை கூறினாலும் திருந்த முடியாது என அடம்பிடிக்கிறார். பதவி கொடுத்த எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டுவதற்காகவே பொறுப்புள்ள ஆளுநர் பதவியை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.

பொறுப்புள்ள ராணுவ வீரர் என்பதை மறந்துவிட்டு, தெரு குழாய் அடி சண்டையில் ஈடுபட்டு உயிர் மாண்டுபோனார் பிரபு என்பதும், அந்த கொலை குற்றத்தில் தொடர்பு இருப்பதாக புகார் வந்ததும் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்பதும் ஊடகங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்.

காவல்துறை எடுத்த நடவடிக்கை பற்றி மாநில அரசின் நிர்வாகத் தலைமை என சொல்லிக்கொள்ளும் ஆர்.என்.ரவிக்கு தெரியாதா?, தெரிந்தும் தெரியாதது போல பாவலா காட்டுகிறாரா?. டுவிட்டரில் பாஜக அட்மினாக மாறி பதிவிட்டுள்ளது நியாயமா? என்பது தமிழ்நாட்டு மக்களின் கேள்வி.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை எந்தவகையில் எல்லாம் சீர்குலைக்கலாம் என அனுதினமும் குதர்க்கமாக யோசிக்கும் பாஜகவினரை ராஜ்பவனுக்கு அழைத்து பேசிவிட்டு, அவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் டுவிட் போடுவதால் என்ன விளைவை எதிர்பார்க்கிறார் ஆளுநர் ரவி. அவரை சந்தித்த பாஜக குழுவில் இருந்த முன்னாள் கர்னல் பாண்டியன், தமிழ்நாட்டில் குண்டு வைப்பேன் என பகிரங்கமாக பேசினார்.

பொதுவெளியில் மிரட்டல் விடுத்த நபர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவல்துறை வழக்கு போட்டு, சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் கடமையை செய்துள்ளது.

தீவிரவாதி போல பேசியவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆளுநர் ரவிக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்ப தார்மீகம் இருக்கிறதா?.

தெருச் சண்டையில் கொலையான ஒரு மனிதருக்காக இவ்வளவு கவலைப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி என்ற கூலிப்படையால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொண்டதற்காக துளிவும் கவலைப்படாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?.

மக்களாட்சியில் அமைச்சரவை கொண்டுவரும் மசோதாவில் கையெழுத்திடும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருப்பது ஆளுநர் பதவிக்காகவே என்பதை தெரிந்தும் அந்த பொறுப்பை செய்யாமல் மெத்தனமாக இருப்பது நியாயமா?

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்பு இணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, 2019ஆம் ஆண்டு ஜூலை வரை அந்த பொறுப்பில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் 2019 பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கொலை செய்தார்களே, அதற்கு தேசிய பாதுகாப்பு இணை ஆலோசகர் பதவியில் ஆர்.என்.ரவி மெத்தனமாக செயல்பட்டார் என்ற குற்றம்சாட்டு எழுந்தால் அவர் பதிலளிப்பாரா?

1982ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை கேரளாவின் கன்னூர் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக ஆர்.என்.ரவி இருந்தபோது, நடந்த கொலைகள் பற்றி கேள்வி எழுப்பினால் அவர் பதிலளிப்பாரா? – 1991 முதல் 2012 வரை உளவுத் துறையின் உயர் பொறுப்பில் இருக்கும்போது நடந்த தீவிரவாத – நக்சல் தாக்குதல்களுக்கு பொறுப்பு சொல்வாரா?

ஒரு மாநில அரசை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆளும்போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவது தான் ஆளுநரின் கடமையே தவிர எதிர்க்கட்சி தலைவர் போல கேள்வி கேட்பதல்ல என்பதை ரவி உணராதவரை அவரை நோக்கி கேள்விகளும் எதிர்வினைகளும் வரும்.

இதையும் படிங்க.!