அதானி குழுமத்தின் சொத்துகளை அரசுடமையாக்குங்கள் ஏலம் விட சு.சாமி கோரிக்கை!
அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கடும் அதிருப்தி! என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அளிக்கை சுப்ரமணியசாமி வெளியிட்ட அறிக்கை தானா தெரியவில்லை.
புதுடெல்லி, பிப் 11 : “விடாது கருப்பு” என்பது போல், மக்களின் சேமிப்பை கையகப்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அதானிக்கு அடுத்தடுத்து வலுவாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அதானி குழுமத்தின் பங்குகள் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்டு மோசடி நடைபெற்றதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதனால் அதானி நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, ஆய்வை எதிர்கொண்டுள்ள “அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும்.
பின்பு அதை ஏலம் விட வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப்பின் மறைவு “வருந்தத்தக்கது” என்று சமீபத்திய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், இது சமூக ஊடகங்களில் வைரலாகி நிறைய விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்து உள்ளார்.
அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24 குறித்தும் பேசிய அவர், அதில் குறிக்கோள்கள் அல்லது உத்திகள் எதுவும் இல்லை என்று குற்றம் சாட்டியவர், எல்லைப் பிரச்னையில் சீனா ஆக்ரோஷமாக இருக்கும் நேரத்தில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு குறைவாக உள்ளது என்றார்.
மேலும் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு சுப்ரமணிய சுவாமி அளித்துள்ள பதில்களும்.
கேள்வி: அதானி குழும விவகாரத்தை பா.ஜ.க அரசு எவ்வாறு கையாண்டு வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருவது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: “அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்னர் அதை ஏலம் விட வேண்டும்,” அந்த பணத்தில், அதானி குழுமத்திடம் பணத்தை இழந்த மக்களுக்கு உதவுவதைப் பார்க்க விரும்புகிறேன்.
மேலும், அதானியுடன் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை என்பது போல பேசுகின்றனர். அவர்களில் பலர் அதானியுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால் நான் காங்கிரஸைப் பற்றி கவலைப்படவில்லை. பா.ஜ.கவின் நேர்மை தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாகவும், கருத்தாகவும் உள்ளது.
கேள்வி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் பற்றி வருத்தம் தெரிவிக்கும் உங்கள் சமீபத்திய ட்வீட், பா.ஜ.க உறுப்பினர்களால் கூட சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பதில் : கார்கில் போரில் இந்தியர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரர் பர்வீஸ் முஷாரஃப் என்று என் மீது நிறைய விமர்சனங்கள். ஆனால், கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக பர்வீஸ் முஷாரஃப் இருந்தார்.
அதாவது, அவர் மக்களைச் சுடச் செல்லவில்லை. ராணுவத்தை சுடச் சொன்னார். போரின் போது (1999 இல்) பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்த நிலையில், அவரை கசாப்புக் கடைக்காரர் என்று எப்படி அழைக்க முடியும். அப்போது, பிரதமர் மோடி அனைத்து நெறிமுறைகளையும் மீறி, பாகிஸ்தானுக்குச் சென்று அவருடன் மதிய உணவு சாப்பிட்டவர் என்று நான் நம்புகிறேன்.
கார்கில் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான மனிதர் நவாஸ் ஷெரீப்பற்றி ஏன் பேசவில்லை, முஷாரஃப்பை நான் பலமுறை சந்தித்ததால் அவரை அறிவேன். நான் அவரை பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் சந்தித்துள்ளேன். அப்போது அவர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிபரானார். அவர் அதிபரானதும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறினார்.
மேலும், தாலிபான்களை தற்காலிகமாக முடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவியவர் முஷாரஃப். எனவே, இவர்கள் (நெட்டிசன்கள்) வேடிக்கையான மனிதர்கள். அவர்கள் என்னிடம் கேள்வி கேட்க விரும்பினால், கார்கில் போரின் உண்மையான சிற்பி யார், நவாஸ் ஷெரீப்பின் இடத்திற்கு மோடி ஏன் சென்றார் என்பது குறித்து என்னுடைய கேள்விளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.
கேள்வி: நீதிபதி விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்துள்ளதற்கு ஒரு பிரிவு வழக்குரைஞர்கள் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
இவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் உங்கள் கருத்துகள் என்ன? பதில்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாருக்கும் சவால் விடலாம். ஒரு தனிநபராக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக, பா.ஜ.கவின் உறுப்பினராக அவர் கூறியதை, நீதிபதியாகி, அப்படியே நடந்துகொள்வார் என்று மதிப்பிட முடியாது. இரண்டாவதாக, தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளபடி, அவர் தற்போது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மறுஆய்வு இருக்கும். எனவே, அவர் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நான் பெயரிட விரும்பாத வேறு நீதிபதிகள் எங்களிடம் உள்ளனர், அவர்களை நீதிபதிகளாக ஆக்கியுள்ளோம், அவர்கள் நீதிபதி ஆவதற்கு முன்பு “தீவிரமான முஸ்லிம்களாக” இருந்துள்ளனர். எனவே, இதுவொருமிதமான வெறுப்புணர்வு என்றே நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் அவர் சிறுபான்மையினருக்கு எதிராக சில வெறுப்பு கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். அப்போது அவர் மீது ஏன் இவர்கள் வழக்குத் தொடரவில்லை? அவர் வெறுப்பு கருத்துகளை வெளிப்படுத்தியபோது. இவர்கள் அதை எளிதாக செய்திருக்கலாம். அதனை செய்யவில்லை. எனவே, இது அவருக்கு எதிரான போலியான பிரசாரம் என்றே நான் நினைக்கிறேன்.
கேள்வி: நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றதில் இருந்தே அவரை விமர்சித்து வரும் நீங்கள், இந்த ஆண்டு பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: இது ஒரு போலியான பட்ஜெட். பட்ஜெட்டில் நான்கு தூண்கள் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? இந்த பட்ஜெட்டில் எந்த நோக்கமும் காணப்படவில்லை. அடுத்த ஆண்டு இந்தியா ஆறரை சதவீத வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் வளர்ச்சி என்ன?, 2019 முதல் இன்று வரை என்ன நடந்தது?, நாம் ஆண்டுக்கு 3 சதவீதம் அல்லது 4 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளோம். 6 சதவீத வளர்ச்சியை அடைய எப்படி செயல்படப் போகிறோம்?, எதற்கு முன்னுரிமை.. விவசாயத்திற்கு முன்னுரிமையா? அல்லது தொழில்களுக்கு முன்னுரிமையா அல்லது சேவைகளுக்கு முன்னுரிமையா?, அரசின் உத்தி என்ன? என்பது குறித்த எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
இதற்கிடையில், அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனோஜ் திவாரி, எம்.எல்.சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தனர்.
அதில், ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை ஒரு சதித்திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் எம்.எல்.சர்மா ஆஜராகி, குறுகிய காலத்திற்குள் அதானி குழும பங்குகள் ரூ.2200-ல் இருந்து ரூ.600-க்கு குறைந்துள்ளது. இப்படியான வீழ்ச்சியை செபி அமைப்பு தடுத்திருக்க வேண்டும். ஆனால் செபி அமைப்பு அவ்வாறு தடை செய்யவில்லை. எனவே இதில் உள்நோக்கம் உள்ளது எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து, சந்திரசூட் தலைமையிலான அமர்வு, திடீரென பங்குச்சந்தை வீழ்ந்த காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில், செபி அமைப்பு அதானி விவகாரத்தை மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்று பதில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், செபி செயல்பாட்டில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
தற்போது திடீரென பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களைப் பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா? என்பது குறித்து நிதி அமைச்சகத்தையும் ஆலோசித்து திங்கட்கிழமை பதில் அளிக்க வேண்டும் என செபி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், முதலீட்டார்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நலனுக்காகவும், பங்குச் சந்தையின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கவும் யோசனை தெரிவித்து வழக்கினை திங்கட்கிழமைக்கு ஒத்துவைத்துள்ளது.