chennireporters.com

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க மே தினத்தில் உறுதியேற்போம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல்.

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைவோம் என மே தினத்தில் உறுதியேற்போம்!

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!

தொழிலாளர் நலன்களை உறுதி செய்துவரும் சட்டங்களில் முதலாளிகள் மாற்றத்தைக் கோருவதும், அதற்கு அரசாங்கங்கள் அடிபணிவதும் வழக்கமாகிவரும் இந்த சூழ்நிலையில் இந்த மே தினத்தை எதிர்கொள்கிறோம்.

200 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள், “மாறி வரும் சூழலுக்கு உகந்ததாக இல்லை” என்ற பொய்யான காரணத்தை காட்டி முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறே, 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒன்றிய அரசால் 4 தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ளன. அதில் தொழிலாளர்களுக்கு பாதகமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 4 தொகுப்புச் சட்டங்களும் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பாலும், அதில் முதலாளிகள் கோரும் சில திருத்தங்களுக்காகவும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. இவை எந்த நேரத்திலும் நடைமுறைக்கு வரலாம் என்ற வகையில் அது எப்போதும் தொழிலாளர்களின் தலைமேல் தொங்கும் கத்தியே.

இந்நிலையில், இந்த புதிய சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால் என்ன மாற்றம் வருமோ, அந்த மாற்றத்தை முன் கூட்டியே நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தில் (1948) ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது.

அதன்படி, அச்சட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் நிலை உருவானது. தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எதிர்த்ததால் அச்சட்டத் திருத்தத்தை தமிழ்நாடுஅரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.

 

தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள உரிமைகள் கூட பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளன என்பதே உண்மை.

அச்சு ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயிக்கும் சம்பள வாரியம் (Wage board) சட்டப்படி குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும். கடைசியாக 2007 ஆம் ஆண்டு சம்பள வாரியம் உருவாக்கப்பட்டது. அது அளித்த பரிந்துரையும் பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு 10 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன.

ஆனால், அதன் பிறகு புதிய சம்பள வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில் இந்த சம்பள வாரியம் குறித்து எந்த வார்த்தையும் இல்லை என்பது மிகப்பெரிய அநீதி. ஆகவே, இந்த சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால் சட்டப்படி சம்பள வாரியம் அமைக்க வேண்டும் என்று நம்மால் கோர முடியாது.

காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை அது உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் கூட, அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை, பத்திரிகையாளர்கள் என்று அங்கீகரிக்கும் வகையில் சட்ட திருத்தமோ அல்லது புதிய சட்டமோ இதுவரை நிறைவேற்றப்படவில்லை. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் தொகுப்பிலும் கூட இந்த மாற்றத்தை ஒன்றிய அரசு செய்யவில்லை என்பது மிகப்பெரிய அவலம்.

ஆகவே, அச்சு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கூட சட்டப்பூர்வமாக சில உரிமைகளை கோரிப் பெற முடியும். ஆனால், தொலைக்காட்சியில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், அரசின் கருணையில்தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.

இந்த பின்னணியில்தான், மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு மிக மிக குறைவான சம்பளத்தை தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதிய சட்டத்தையும் கூட எந்த தொலைக்காட்சி நிறுவனங்களும் கடைபிடிப்பதில்லை.

அதேபோல், சட்டப்படி தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் எந்த திட்டங்களையும் (PF, ESI) அவர்களுக்கு தெலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படுத்துவதில்லை. இதைத்தொடர்ந்து சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் கூட இந்த அடிப்படை சட்டங்களில் வழங்கப்படும் உரிமைகளை வழங்க தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன என்பது கொடுமையிலும் கொடுமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசு, பத்திரிகையாளர்களுக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், புதிய நலத் திட்டங்களை உருவாக்கவும் பத்திரிகையாளர் நல வாரியத்தை உருவாக்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, நலவாரியமும் உருவாக்கப்பட்டது. எந்த ஒரு துறையிலும் அதில் செயல்படும் சங்கங்களைத் தாண்டி வேறு யாரும் அத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் தேவைகளை புரிந்து வைத்திருக்க முடியாது.

ஆகவே, பத்திரிகையாளர் நல வாரியத்தில் பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், எந்த சங்கங்களின் பிரதிநிதிகளையும் சேர்க்காமல் தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாரியம், யாரையெல்லாம் வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கலாம் என்று வகுத்துள்ள வரையரையால் சுமார் 90 சதவீத பத்திரிகையாளர்கள் அதில் உறுப்பினராக சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று டிஜிட்டல் ஊடகம் ஒரு மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இனி எதிர்காலமே டிஜிட்டல் ஊடகம்தான் என்ற நிலையை நோக்கி வளர்ச்சியடைந்தும் வருகிறது. பல முன்னணி தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் தற்போது டிஜிட்டல் ஊடகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் அரசு வழங்கும் எந்த நலத் திட்டங்களிலும் பயன்பெற தகுதியற்றவர்களாக உள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகும்.

இப்படிப்பட்ட நெருக்கடியான கால கட்டத்தில் 14 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் பக்கம் நின்று, அவர்களின் உரிமையை வென்றெடுக்கும் பணியில் அயராது பாடுபட்டு வருகிறது.

 

அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அநியாய பணிநீக்கங்களுக்கு எதிரான வழக்குகளில் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், பத்திரிகையாளர்களின் திறன் வளர்ப்பிற்காகவும் சங்கம் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

 

இந்த பணிகள் தொய்வின்றி தொடரவும், நமது உரிமைகள் நிலைநாட்டப்படவும், கீழ்காணும் கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று, அனைத்து பத்திரிகையாளர்களையும் மே தினத்தன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறை கூவி அழைக்கிறது.

* தமிழ்நாடு அரசை, தொழிற்சாலைகள் சட்ட (1948) திருத்தத்தை முற்றிலும் கைவிடச் செய்வோம்!

* ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துவோம்!

* இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பள வாரியத்தை (Wage board) உடனே அமைக்க போராடுவோம்!

* மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த போராடுவோம்!

* காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறுவோம்!

* பத்திரிகையாளர் நல வாரியத்தில் எந்த வித பாகுபாடுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக்க போராடுவோம்!

* நல வாரியத்தில் நமது குரல் ஒலிக்க, பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம்!

 

இதையும் படிங்க.!