காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்.
நீரவ் மோடி ,லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது . இதனை அடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் கண்டனமும் ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர்.
இதனை அடுத்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்ட சார்பாக ஆவடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற ரயிலை வழிமறித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மோடிக்கு எதிராக கண்டன கோஷத்தை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், மாநில பொதுச்செயலாளர் காங்கை குமார், ஆவடி நகரத் தலைவர் அமித் பாபு, மாநில செயலாளர் ஜெனி சதீஷ், விளையாட்டுத்துறை துணைத் தலைவர் பூவை ராஜா, மாவட்ட தலைவர் பச்சைபாஸ் பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் கார்த்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திரன், அன்பு, ஜேம்ஸ், பாண்ட் ,சிவக்குமார், சரத்குமார், சாமுவேல், ரூபன், ஜெகதீசன், ராமு, ராஜா மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஆவடியில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இரவு எட்டு முப்பது மணிக்கு விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆவடியில் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்