Chennai Reporters

ராணுவ கேப்டனாக பதவி ஏற்றார் தமிழச்சி அந்தியூர் சரண்யா.

இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆவார்.

சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர் சரண்யா. இவர் விரைவில் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார்.

இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆவார். சரண்யா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். கால்நடைகளையும் வளர்த்தார். கபடி வீராங்கனையும் ஆவார். அவர் ராணுவ பயிற்சியில் சேர்ந்து 3 முறை தோல்வியை தழுவினார். இந்த முறை அவர் சாதித்து விட்டார்.

 

இது தொடர்பாக சரண்யாவுக்கு பயிற்சி அளித்த கமாண்டர் கூறியதாவது:- சரண்யா அந்தியூர் பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரது வீட்டை சுற்றி வனப்பகுதி உள்ளது. அவரது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு 20 கி.மீ. தூரம் மண் ரோட்டில் செல்ல வேண்டும். அந்த மண் ரோட்டில் கார் கூட செல்ல முடியாது.

இதனால் அவர் பயிற்சிக்கு வருவதற்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தனியாக மண் ரோட்டில் 20 கி.மீ. தூரம் சென்று அங்கு ஒரு இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு 4 பஸ்கள் மாறி பயணம் செய்து காலை 7 மணிக்கு பயிற்சிக்கு வந்து விடுவார். சில நாட்கள் அவர் 7.05 மணிக்கு வருவார்.

அப்போது அவரை திட்டுவேன். ஆனால் அவர் இவ்வளவு சிரமப்பட்டு வருவதை ஒருநாள் கூட என்னிடம் சொன்னதில்லை. 5 நிமிடம் தாமதமாக வந்து நான் திட்டும்போது மன்னிப்பு கேட்டு விட்டு இனி சரியான நேரத்துக்கு வந்து விடுவதாக கூறுவார்.

இந்த விஷயங்கள் எல்லாம் நான் அவரது வீட்டுக்கு சென்றபோதுதான் தெரிய வந்தது. அதையும் சரண்யா சொல்லவில்லை. அவரது தாயார் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவரது வீட்டுக்கு சென்றபோது பாதி தூரம்தான் காரில் செல்ல முடிந்தது. மீதி தூரம் நடந்தே சென்றோம். சரண்யாவின் தாயார் என்னிடம் பேசியபோது, “சரண்யா அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார்.

அவர் எப்படி பயிற்சிக்கு செல்கிறார் என்பதே எனக்கு தெரியாது. 6 மாதமாக இப்படியே கஷ்டப்பட்டார். இவ்வளவு சீக்கிரம் எழுந்து செல்கிறாயே.. உனது கமாண்டர் மனிதனா, மிருகமா? என்று திட்டி இருக்கிறேன்” என்றார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே அந்த கமாண்டர் நான்தான் என்றேன். சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள். இவர்கள்தான் சிங்கப் பெண்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!