chennireporters.com

நன்றிக்கு பெயர் நாய். அதன் விலையோ 20 கோடி.

மனித சமூகத்தில் நன்றிக்கு பெயர் போனது நாய் . உலகத்தில் பலவிதமான நாய்கள் உள்ளன.  ஆனால் அவைகளின் விலைகள் குறைந்தபட்சம் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் மட்டுமே இருந்துள்ளன.  ஆனால் பெங்களூரில் ஒரு நாயின் விலை  20 கோடி ரூபாய்  கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.   இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளருமாக இருப்பவர் சதீஷ்.  இவர் தான் ரூ.20 கோடி கொடுத்து ‘காகேசியன் ஷெப்பர்டு’ என்ற  நாயை வாங்கி உள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து சதீஷ் இந்த நாயை வாங்கி உள்ளார். அந்த நாய்க்கு தற்போது 1½ வயது தான் ஆகிறது. நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்று சதீஷ் பெயர் சூட்டி உள்ளார்.

இந்த நாய் பெரும்பாலும் ரஷியா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் தான் காணப்படும். இந்தியாவில் இந்த இன நாய்களை காண்பது மிகவும் அரிதானது. காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் மிகவும் தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன் கொண்டவை ஆகும். ஏறக்குறைய இந்த நாய் சிங்கத்தின் தோற்றமுடையதாக இருக்கும். இந்த நாய்கள் 10 முதல் 12 வருடங்கள் வரை  உயிர்வாழ கூடியவை ஆகும்.

சதீஷ் ஏற்கனவே ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன அரிய வகை நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே’ இன அரிய வகை நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 கோடி கொடுத்து நாய் வாங்கியது குறித்து சதீஷ் கூறுகையில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ”காகேசியன் ஷெப்பர்டு” இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கினேன். திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் ‘கடபோம் ஹைடர்’ கலந்து கொண்டு 32 பதக்கங்களை வென்றது. ‘கடபோம் ஹைடர்’ அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. தற்போது எனது வீட்டில் ‘கடபோம் ஹைடருக்கு என தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கி உள்ளேன்’.

கடந்த நவம்பர் மாதம் ‘கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பினேன்’. ஆனால் தற்போது ‘கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை உள்ளது’. இதனால் அடுத்த மாதம் ‘கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன்’. ”காகேசியன் ஷெப்பர்டு” இனத்தை சேர்ந்த 2 நாய் குட்டிகளை ரூ.5 கோடி கொடுத்து வாங்கி உள்ளேன். நாயையும், குட்டிகளையும் நானே வளர்க்க உள்ளேன் என்றார்

இதையும் படிங்க.!