chennireporters.com

கர்நாடகா மோதிக் கொள்ளும் பெண் அதிகாரிகள்.

கர்நாடக மாநிலத்தின் ஐபிஎஸ் – ஐஏஎஸ் என இரு பெண் உயரதிகாரிகள் இடையிலான  மோதலால் கர்நாடக உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபா ஐபிஎஸ்  கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக உள்ளார். ரோகிணி ஐஏஎஸ் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக உள்ளார்.

ரூபா ஐபிஎஸ் அதிகாரி தமிழக மக்கள் வரை நன்கு பரிச்சயமானவர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் சிறை விதிகளை மீறி பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதாகவும், அதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிகளில் தொகை பரிமாறியதாகவும் குற்றம்சாட்டியவர்.

இது உட்பட ரூபா தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பல்வேறு அதிரடிகளை அம்பலப்படுத்தியதில் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர். இதற்கு பரிசாக 20 ஆண்டுகளில் 40க்கும்  அதிகமாக பணிமாற்றம் செய்யப்பட்டவர். இருப்பினும் தனது அதிரடி செயல்களில் தொடர்ந்து பணியாற்றி  வருகிறார். சில தருணங்களில் ரூபாவின் குற்றச்சாட்டுகள் ஏடாகூடமாவதும் உண்டு. ரோகிணி ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான ரூபாவின் குற்றச்சாட்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மைசூரு மாவட்ட ஆட்சியராக ரோகிணி இருந்தப்போது அப்போதைய அமைச்சரும் இப்போதைய எம் எல் ஏவுமான சா.ரா.மகேஷ் உடன் மோதல் ஏற்பட்டது.   மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த இந்த மகேஷ் உடன், சில தினங்களுக்கு முன்னர் உணவகம் ஒன்றில் உடனிருந்தது தொடர்பான புகைப்படத்தை தனதுசமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியாக வெளியிட்டார் ரூபா. ரோகிணி – மகேஷ் என முரண்பட்டிருந்த இருவரிடையே திடீர் சமசரம் ஏற்பட்டிருப்பதன் பின்னணி குறித்தான கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

பதிலடியாக ‘ரூபாவுக்கு புத்தி பேதலித்ததாகவும், மனநல சிகிச்சை தேவைப்படுவதாகவும்’ ரோகிணி ஐஏஎஸ் தாக்கினார். ரூபா ஐபிஎஸ் தனது போக்கினை நிறுத்தவில்லை. ரோகிணி தனது தனிப்பட்ட புகைப்படங்களை ஆண் மேலதிகாரிகளுக்கு பகிர்ந்ததாக, அந்தப் படங்களை பொதுவெளியில் பதிவிட்டார். இந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக நடத்தை விதிகளை ரோகிணி மீறியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இப்படி 19 குற்றச்சாட்டுகளை ரூபா ஐபிஎஸ் பட்டியலிட்டிருந்தார்.

அவற்றில் ஒன்று, கரோனா காலத்தின் மத்தியில் மாநில மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருந்தபோது, ரோகிணி ஐஏஎஸ் தனது ஆடம்பர மாளிகையில் நீச்சல் குளம் கட்டியது தொடர்பானது. மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகளின் ஊழல்களையும் தொட்டுச் சென்றன.

தனிப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக விளக்கமளித்த ரோகிணி, அவை அனைத்தும் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த படங்களே என சாதித்தார். ஆனால், அந்த படங்களில் சில பொதுவெளியில் பகிர வாய்ப்பில்லாத வகையிலும் அமைந்திருந்தன.

இரு பெண் உயரதிகளின் மோதல் விஷயத்தில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட அரசியல் மற்றும் அதிகார மட்டத்தினர் ஒதுங்கியே நின்றனர். ‘இரு பெண்களின் தனிப்பட்ட விவகாரம் இது’ என்று பொம்மைஎச்சரிக்கையுடன் நழுவினார். சட்டப்பேரவை தேர்தல் நெருக்கத்தில், எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள அவர் உட்பட எந்த அரசியல்வாதியும் விரும்பவில்லை.

ஆனால், ரோகிணி ஐஏஎஸ் மீதான குற்றச்சாட்டுகளின் போக்கில், அரசியல் புள்ளிகளின் ஊழல் விவகாரங்களும் வெளிப்பட்டு வந்ததில், அதிகார – அரசியல் மட்டத்தில் உள்ளோர் அலற ஆரம்பித்தனர். உடனடியாக இருதரப்பிலும் சுமூகம் எட்டுவதற்கான மத்தியஸ்த வேலைகளையும் முடுக்கி விட்டனர்.

இதன் விளைவாக ரோகிணிக்கு எதிரான பதிவுகளை ரூபா தனது சமூகவலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார் அல்லது மறைத்துள்ளார். மேலும் ஸ்கிரீன்ஷாட் பதிவுகள் தீயாய் பரவி வருகின்றன. இப்போதைக்கு 2 பெண் அதிகாரிகளும் அமைதி காத்தாலும், உள்ளுக்குள் கனன்று வரும் பிரச்சினை எப்போதுவேண்டுமானாலும் பெரிதாய் வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றிலாது, பல்வேறு அரசியல் புள்ளிகளின் ஊழல் விவகாரங்களும் இந்த சண்டையில் வெளிப்பட சாத்தியமுள்ளதால், தேர்தல் முடியும் வரையிலேனும் ரூபா ஐபிஎஸ் வாயை அடைப்பதற்கான வழிகளை சத்தமின்றி ஆராய்ந்து வருகின்றனர். அவர்களின் தவிப்பு ஈடேறுமா அல்லது ரூபா – ரோகிணி மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டுமா என்ற கேள்வியே, கர்நாடக உயரதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தை தற்போதைக்கு ஆட்டிப்படைத்து வருகிறது.

 

இதையும் படிங்க.!