chennireporters.com

செய்தியாளர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நடிகர் சத்தியராஜ் காட்டம்

 

முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட் தேர்வு பாதிக்கும் என்று ஈரோட்டில் நடிகர் சத்யராஜ் கூறினார்.

மன அழுத்தம்

மனதின் மையம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, உறவில் சிக்கல், மூட நம்பிக்கைகள், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பெண் அடிமைத்தனம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம், பொருளாதார சிக்கல், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம் ஆகும்.

நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை.

டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது ரொம்ப முக்கியம்.

மனநலம் மேம்படுத்தினால் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு டாக்டர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் டாக்டர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்.ஜி.ஆரின் பாடல் கேட்பேன். அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்தியராஜ்   “நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி உருவாகுவது முக்கியம். அதற்கு தடையாக எது இருந்தாலும் நீக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார். தொடர்ந்து சத்தியராஜிடம், தொடர்ச்சியான தற்கொலை செய்திகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ ஒரு சினிமா நடிகருக்கு ஐன்ஸ்டீன் அளவிற்கு தெரியும் என நினைத்துக் கொள்வது இச்சமூகத்தின் மிகப்பெரிய தவறு. நடிகர்களை ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் என்றால் நடிப்போம் நாங்கள். ஆகவே எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள்;

தலையில் வைத்து கொண்டாடுவது வேண்டாம். இது எனக்கு ஊடங்களின் மீதுள்ள வருத்தம். நாங்கள் யாரும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது வேறு ஏதும் அறிஞர்களோ இல்லை. அதை புரிந்துக்கொள்ளுங்கள் ” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு நான் தான் ராஜா. இந்த நிகழ்ச்சியை திசை திருப்பி வேறெங்கோ கொண்டு செல்கிறீர்கள். செய்தியாளர்களுக்கு சமூக அக்கறை இல்லை” என காட்டமாக பதில் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “என்னிடம் வாயை பிடுங்க முடியாது” என காரசாரமாக பேசினார். இது அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க.!