நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியதாக பேசியவர் சவுக்கு சங்கர்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு எதிராக கூட இந்த நபர் கடுமையான அவதூறுகளை பேசி பரப்பி இருக்கிறார். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று கூட அவர் பேசியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘யூடியூபர்’ சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தாம்பரம், சேலம், நாகப்பட்டினம், நெல்லை, நீலகிரி ஆகிய நகரங்களில் 16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி விசாரித்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்குகளையும் ரத்துசெய்யக்கோரிய சவுக்கு சங்கரின் ரிட் மனுவுக்கு ஆகஸ்ட் 23-ந் தேதிக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கை அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சவுக்கு சங்கர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, ‘குண்டர் சட்டத்தில் அடைத்ததை ரத்து செய்யக்கோரி மனுதாரரின் தாயாரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டதை நினைவுகூர்ந்து, அந்த மனுவுடன் இதை இணைக்கலாம்’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘இந்த மனுவையும், குண்டர் சட்டத்தில் அடைத்ததை ரத்து செய்யக்கோரிய மனுவுடன் இணைத்து விசாரிக்கப்படும்’ என கூற முயன்றனர். அப்போது குறுக்கிடட், தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணனுடன் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, ‘அந்த வழக்கு வேறு, இந்த வழக்கு வேறு. இரண்டையும் இணைத்து ஒன்றாக விசாரிக்கக் கூடாது’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘ஒரே விவகாரத்தில் ஏன் இந்த மனுதாரரை இப்படி தேடுகிறீர்கள்?, ஜாமீனில் வெளியே வந்தவுடன் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் இப்படி செய்ய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா விளக்கம் அளிக்க முற்பட்டார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘நேரமின்மை காரணமாக வாதங்களை கேட்க முடியவில்லை. எனவே அடுத்த விசாரணையின்போது வாதங்களை கேட்டு ஆராய்வோம்’ என தெரிவித்து விசாரணையை ஆகஸ்ட் 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது. நேரமின்மை காரணமாக விசாரணை நடைபெறாததை தொடர்ந்து, மனுக்கள் மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதன்படி சவுக்கு சங்கர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குண்டாஸ் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளுக்கு எதிராக கூட இந்த நபர் கடுமையான அவதூறு பரப்பி இருக்கிறார். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று கூட அவர் பேசியிருக்கிறார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு எதிராக ஏற்கனவே தானாக முன்வந்து விசாரணை நடத்தி இருக்கிறது என்று வாதிட்டார். இந்நிலையில் ஒரே பேட்டிக்காக சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் வெவ்வேறு விவகாரங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். ஒரே விவகாரத்திற்காக தான் அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பதியப்படும் குண்டாஸ் வழக்குகளில் 51% தமிழ்நாட்டில் போடப்படுகிறது என்றும் தமிழக அரசு குண்டாசை தவறாக பயன்படுத்துகிறது என்றும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் வாதிப்பட்டது.
இதையடுத்து 16 வழக்குகளையும் ஏன் ஒரே வழக்காக விசாரிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது குண்டர் சட்டம் போட்டப்பட்டதை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவிற்கும் பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (செப்டம்பர் 2ம் தேதி) தள்ளிவைத்து உத்தரவிட்டது.