திருவள்ளூர் அருகே போலி பட்டா மூலம் நிலத்தை பத்திரப் பதிவு செய்ததால் இதற்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர், சார் பதிவாளர், நில அளவர் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குற்றச்சாட்டு. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் எச்சரிக்கை.
ஆவடி வட்டாட்சியர் ரஜினிகாந்த்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவரது தந்தை சண்முகம். இவர் தனக்கு சொந்தமான 11 சென்ட் நிலத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு தான செட்டில்மென்ட் மூலம் மகன் ஜெயச்சந்திரனுக்கு பத்திரப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ் என்கிற நெடுஞ்செழியன் மற்றும் கண்ணன் மனைவி சங்கரி, வி.சோமசுந்தரம் ஆகியோர் ஜெயச்சந்திரன் பெயரில் உள்ள 11 சென்ட் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு சங்கரி பெயரில் போலியாக பட்டா பெற்றுள்ளனர்.
போலியாக பட்டா மற்றும் பத்திரம் தயாரித்து மோசடி செய்த அமுல்ராஜ் (எ) நெடுஞ்செழியன்.
ஆவடி வட்டாட்சியர் ரஜினிகாந்த் என்பவர் இந்த பட்டாவை வழங்கியுள்ளார். இந்த பட்டாவை வைத்து ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பட்டாவை மட்டும் காண்பித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த நிலம் சம்மந்தமாக ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்துள்ளார் ஜெயச்சந்திரன், அப்போது உங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கு சோமசுந்தரம் என்பவருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ததும் தெரியவந்தது.
Avadi ccb Inspector manikarajan.
இதனையடுத்து தகவல் அறியம் உரிமைச் சட்டம் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு விண்ணப்பித்ததில் சங்கரி என்பவருக்கு தாய்ப்பத்திரம் மற்றும் வில்லங்க சான்று ஆகியவற்றை முறைப்படி பரிசீலிக்காமல் பட்டா வழங்கியது தெரியவந்தது. இது குறித்து ஜெயச்சந்திரனின் தந்தை சண்முகம் ஆவடி ஆணையரகத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை போலியாக பட்டா மற்றும் பத்திரம் தயாரித்து மோசடி செய்த விநாயகம், அமுல்ராஜ் (எ) நெடுஞ்செழியன், கண்ணன் மனைவி சங்கரி, சோமசுந்தரம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி பட்டா வழங்கிய ஆவடி வட்டாட்சியர் ரஜினிகாந்த், ஆவடி தலைமை நில அளவர் அறிவழகன், குறுவட்ட நில அளவர் முகமது ஆரிப், மீதும், போதிய ஆவணம் இல்லாமல் வில்லங்க சான்று சரிபார்க்காமல் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த ஆவடி சார்பதிவாளர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
வி.சோமசுந்தரம்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார்;
ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் விசாரணை செய்ய பூந்தமல்லி நீதிமன்றம், ஆவடி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆவடி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எப்ஐஆர் பதிவு செய்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை ஊழல் செய்த அதிகாரிகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வழக்கறிஞரான தனது நிலத்தை போலி பட்டா மூலம் பத்திரப்பதிவு செய்தது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் அலைக்கழிப்பது ஏன் என்றும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆவடி குற்றப்பிரிவு போலீசார் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் அதையும் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
