சம ஊதியத்திற்கும்
சம பணி நேரத்திற்கும்
சம மரியாதைக்கும்;
உழைக்கும் பெண்கள் போராடியதை நினைவூட்டும் வகையில் மார்ச் 8ம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக உலகம் கொண்டாடி வருகிறது.
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா” என்றார் கவிமணி தேசிய விநாயகம்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி”
என்றார் மகாகவி பாரதியார்.
“உலக அளவில்
பெண்கள் பெறும் உரிமையே
ஒரு சமூகத்தின் விடுதலை”
என்றார் தந்தை பெரியார்.
கவிமணி தேசிய விநாயகம்.
சும்மா வந்துவிடவில்லை இந்த சுதந்திரம். இதற்காக பல பெண்கள் போராடி இருக்கிறார்கள். உண்மையான சமூக அக்கறை கொண்ட பல ஆண்களும் துணை நின்றிருக்கிறார்கள்.இன்று பெண்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி உள்ளார்கள், என்றாலும் முழுமையான மரியாதை பெண்களுக்கு கிடைத்திருக்கிறதா? என்பதை இதயசுத்தியோடு சிந்திக்க வேண்டும்.
மகளிர் தினம் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ அதன் வரலாற்றை அறிந்து கொள்வது இதைவிட முக்கியம். கி.பி. 1789-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போதும் சுதந்திரம் சமத்துவம் வேண்டி பாரிஸ் நகரில் பெண்களும் போராடினர்.
பிள்ளை பெறுவதைத் தவிர எதற்குமே பயன்படாதவர்கள் என்று கருதப்பட்ட பெண்களை 18ம் நூற்றாண்டில் வீட்டு வேலைக்கு மட்டும் சரியாக இருக்கும் என்று தொடங்கி, தொழிற் புரட்சிக்குப் பின்னர் தொழிற்சாலையிலும் அலுவலக வேலைக்கும் அனுமதிக்க ஆரம்பித்தார்கள். ஆண்களோடு வேலை செய்ய அனுமதிக்கப்பட்டாலும் ஊதியத்தில் மட்டும் வேறுபாடு இருந்தது.உழைப்புச் சுரண்டலும் ஊதிய முரண்பாடும் உரிமை இல்லாத அடிமை முறையிலும் இருந்த நிலையில் எதிர்ப்புக்குரல் எழுந்ததன் அடையாளம் தான் மார்ச் 8 மகளிர் தினம்.
1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் கோரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் பெண்கள் திரண்டனர். ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் தலைமை தாங்கினார்.அதன்பின்னர் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த 17 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார் கிளாரா ஜெட்கின். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், “அமைதியும் ரொட்டியும்”தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.அந்தப் போராட்டம் மாவீரர் லெனின் தலைமையில் நடந்த புரட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்து, சோசலிச போராட்டமாக விரிந்து ஜார் மன்னரை வீட்டுக்கு அனுப்புவதில் முடிந்தது.
அதனை நினைவு கூரும் வகையிலும் மார்ச்-8க்கு மகத்துவம் சேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து 1921ல் மார்ச் 8ம் தேதியை பல நாடுகள் மகளிர் தினமாக கொண்டாடத் துவங்கியது.
நீண்ட கால கோரிக்கைகளுக்குப் பிறகு 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா அறிவித்தது. அதன்பின்னர் 1977 ல் ஐ.நா. சபை தீன்மானத்தின் படி மார்ச் 8 ம் தேதி அனைத்துலக மகளிர் தினமாக கொண்டாடப் படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை ஒரு கருப்பொருளை அல்லது ஒரு முழக்கத்தை முன்வைக்கும்.
இந்த 2025 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை “எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவது”
என்று அறிவித்துள்ளது.
இந்த அனைத்துலக மகளிர் தினம் கொண்டாத்தின் தொடர்ச்சியாக உலகெங்கும் பெண்களின் முன்னேற்றத்தின் தடைகளை களைவதில் அரசாங்கங்களும் பொதுமக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம்.
நாமும் இந்த தொழில் நுட்ப யுகத்தில் பெண்களின் சாதனைகளை போற்றவும், பெண்களுக்கான சவால்களை அங்கீகரிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பழகுவோம்.பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதால் உறவுகள் பிரிந்ததாகவும், பெண்கள் படித்ததால் ஆண்களின் வேலை பறிபோனதாகவும்,
பெண்கள் வேலைக்குப் போவதால் குடும்ப அமைப்பே சிதைந்து விட்டதாகவும் மூளையில் முள் முளைத்த முட்டாள்கள் இப்போதும் பேசித்திரிகிறார்கள். ஆங்கிலேயரை எதிர்த்த இந்திய விடுதலைப் போரிலும், உலகின் பல நாடுகளில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை யாரும் ஒதுக்கிவிட முடியாது.
நமது காலத்தில் விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராக தன்மான உணர்ச்சி கொண்டு களத்தில் நின்ற தமிழ் ஈழத்திலும் பல நாடுகளின் விடுதலைப் போரிலும் பார்க்கிறோம்.எனவே நம்மோடு சமகாலத்தில் வாழ்கிற அனைத்து மனிதர்களையும் சமமாக மதிக்கிற மனப்பான்மை வளர்த்துக் கொள்ளும் பழக்கத்தை பெண்களை மதிப்பதில் இருந்து தொடங்குவோம். நமக்கு தாயாக, தங்கையாக, தமக்கையாக,தோழியாக, மனைவியாக நம் வாழ்வோடு எப்போதும் உடன் வருகிற பெண்களை மதிப்போம்.
அ.முகமது ஜியாவுதீன்.