பாண்டி மெரினாவில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய கவர்னர் கைலாச நாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் முக்கிய அமைச்சர் ஒருஒரும் சில முக்கிய விஐபிகளும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
புதுச்சேரி மெரினா முறைகேடு குறித்து விசாரணை நடத்த புதுவை கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பாண்டியில் மெரினா உருவாக்கப்பட்டது.
கவர்னர் கைலாசநாதன்
அங்கு கட்டப்பட்ட 34 கடைகள் இரண்டு நிகழ்ச்சி அரங்குகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 4500 சதுர அடி இடத்தினை சுற்றுலாத்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு தனியாருக்கு லீசுக்கு விட்டது. அதில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் சாம்ராஜ், மற்றும் காமராஜ், கார்த்திகேயன் ஆகியோர் பினாமி பெயரில் முறைகேடு செய்து பாண்டி மெரினாவை பத்து ஆண்டுகளுக்கு மாதம் 6 லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி
இதனை தொடர்ந்து அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி பாண்டி மெரினாவில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வருகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக இரண்டு ஏக்கர் இடத்தை அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எந்தவித முன் அனுமதியும் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்டு சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை கூடுதலாக கட்டி உள்ளனர். இந்திய வாடகை சட்டத்தை மீறி சட்டவிரோதமாக ஒரு கடைக்கு 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அமைச்சர் நமச்சிவாயம்
மேலும் காவல்துறையின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையும் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என கூறப்படுகிறது. வனத்துறையில் முறையான அனுமதி பெறாமல் ஒட்டகம் மற்றும் குதிரை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. படகு சவாரி என்ற பெயரில் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது.
பாண்டி மெரினாவில் சட்டவிரோதமாகவும் விதிமுறைகளை மீறியும் அமைச்சரின் ஆதரவாளர்கள் மாதம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி உள்ளிட்ட எந்த வரியும் முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பும் செய்து வருகின்றனர் பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாண்டி மெரினா
பாண்டி மெரினாவில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கவர்னர் முதல் அமைச்சர் வரை சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாண்டி மெரினாவில் நடைபெறும் முறைகேடுகளை விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பாண்டி மெரினாவில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்துள்ளது. புகார் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு செய்துவிட்டு அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்
இதில் தவறு நடந்திருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்களின் அத்துமீறல்கள் மற்றும் அடாவடித்தனத்தை கண்டித்து பாண்டி மெரினாவில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அமைச்சருக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சிபிஐ விசாரிக்க தொடங்கினால் பல முக்கிய விஐபிகளும் அவருகளது பினாமிகளும் சிக்குவார்கள் என்கிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி . சில ஆண்டுகளாகவே பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பற்றியும் அவரது அரசு நிர்வாகம் பற்றியும் பல்வேறு சர்சைகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடதக்கது.