தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் மாவீரன் தமிழரசனின் நண்பரும் போராட்ட களத்தில் அவரடன் களம் கண்ட வீரருமான சண்முகம் உடல்நல குறைவால் காலமானார்.
இது குறித்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆத்தூர் சிவசுப்பிரமணியன் தனது முகநூலில் சண்முகத்திற்கு இரங்கலை தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தமிழரசனுடன் சண்முகம் பணியாற்றியது குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ஆத்தூர் சிவசுப்பிரமணியன்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள வட அரிராஜபுரம் சண்முகம். தோழர் தமிழரசனோடு 1970 முதல் 1987 வரை, 17 ஆண்டுகள் பயணித்தவர். தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பின் முக்கிய பொறுப்பாளர். பல அழித்தொழிப்பு நடவடிக்கைகளிலும், கொல்லிமலையில் நடந்த தமிழ்நாடு விடுதலைப் படையின் மாநாட்டிலும் கலந்து கொண்டவர்.2020 ஆம் ஆண்டு நான் அவரை சந்தித்துப் பேசியபோது, பெரியவர் தமிழரசனைப்போல இன்னொரு தலைவர் பிறக்கவே முடியாது. அவரைப்போல சமூக சிந்தனை கொண்ட தலைவர் வேறு யாருமில்லை. பெரியவர் தமிழரசனோடு பயணித்து, அவரோடு வாழ்ந்து, அவரோடே சாகவேண்டும் என்று விரும்பினேன்.
அரிராஜபுரம் தோழர் சண்முகம்
அரியலூர் மருதையாற்றுப் பால த்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அதனால், பெரியவர் தமிழரசனோடு தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. சிறையில் இருந்து நான் விடுதலை ஆவதற்கு முன்பாகவே, பெரியவர் தமிழரசன் கொல்லப்பட்டு விட்டார். இப்போது வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
பெரியவர் தமிழரசனைப் பற்றி யாராவது நூல் எழுதுவார்கள், அதற்காக என்னை சந்திப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அந்த வேலையை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தோழர் தமிழரசன் அவருக்கும் இடையே இருந்த நட்பு தோழமை குறித்து நீண்ட நேரம் பேசினார். கடந்த ஒரு மாதம் முன்பாக, தனது அனுபவங்களை எனக்கு வீடியோ பதிவாகவும் கொடுத்தார். தோழர் சண்முகம் ஓய்வு நேரந்ததில், புவனகிரி வெள்ளாற்றின் கரையில் பனை விதைகளை நடவு செய்து கொண்டிருந்தார்.
செவித் திறன் குறைபாடு இருந்ததால் அவரோடு தொலைபேசி மூலமாக தொடர்ந்து பேச முடியவில்லை. அவருடைய நண்பர் பெருமாத்தூர் ராஜா என்பவர் மூலம், அடிக்கடி பேசிவந்தேன். குடும்பத்தைவிட்டு தனித்து வாழ்ந்துவந்த தோழர் சண்முகம், வயது மூப்பின் காரணமாக போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.மாவீரன் தோழர் தமிழரசன்.
கங்கைகொண்ட சோழபுரம் பக்கமுள்ள சுண்டிப்பள்ளம், ஆசிரியர் பழனிசாமி, பெரியவர் தமிழரசனோடு பயணித்தவர். தோழர் சண்முகத்தைப் பற்றி பழனிசாமியிடம் சொன்னேன்.
உடனே சன்முகத்தை சந்தித்த பழனிசாமி, என்னுடைய வீட்டுக்கு வந்துவிடுங்கள். நீங்கள் மட்டுமல்ல. பெரியவரோடு பயணித்த தோழர்கள் யார் இருந்தாலும், அவர்களை அழைத்துவந்து என்னுடைய பொறுப்பில் வைத்து கவனித்துக் கொள்கிறேன். மே மாத விடுமுறையில், உங்களை சென்னைக்கு அழைத்துச் சென்று காது கேட்க்கும் கருவியும் வாங்கிக் கொடுக்கிறேன்” என்று சொல்லியுள்ளார்.
“உள்ளூரில் சில வேலைகள் உள்ளன. அவற்றை முடித்துக்கொண்டு உங்க வீட்டுக்கு வருகிறேன்” என சண்முகமும் சொல்லியிருக்கிறார். வழக்கம் போலவே இன்று காலையில் ராஜா பேசினார். தோழர் சண்முகம் தான் பேச விரும்புகிறார் என நினைத்தேன். “ஒரு வருத்தமான செய்தி தோழர் என்றவர் “பெரியவர் சண்முகம் இன்று 8.3.2025 காலை, தோழர் தமிழரசன் சென்ற இடத்திற்கே சென்று விட்டார்” என்றார். இளைப்பாறுங்கள் தோழர்.
