விநாயகர் சதுர்த்தி வரும்போதெல்லாம் புத்தரை கொண்டு வந்து நடுசந்தியில் நிறுத்தி சாணியடி வாங்க வைப்பதையே ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். நமது சகோதரர்கள்.
புத்தர் உடைத்து வெட்டி யானை தலையை வைத்து தான் பிள்ளையார் உருவானார் என்பது பௌத்த பொய். சரி புத்த சிலைகள் எல்லாம் தலை வெட்டப்பட்டு இருக்கின்றதே? என்று தானே கேட்கிறீர்கள்.
சமண எச்சங்களையெல்லாம் பௌத்த அடையாளங்களாக காட்சிப்படுத்தும் அல்லது ஆவணப்படுத்தும் பெரும் பிழையை தமிழக எழுத்தாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதுதான் அதற்கு பதில்.
உண்மை என்ன தெரியுமா? இந்திய நிலபரப்பு முற்றும் முழுவதுமாக சமணம்தான் கோலோச்சி நின்றது. தென்னிந்தியாவில் ஒரிசா மற்றும் விந்திய மலைக்கு கீழ் சமணம்தான் முதன்மை சமயமாக இருந்து வந்தது. பௌத்தம் பின்புதான் வருகிறது.வந்த பௌத்ததால் சில நூற்றாண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை, தென் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பௌத்தம் மிக மிக சொற்ப அளவில் தான் இருந்தது. ஒரு புரிதலுக்காக, நிகழ்காலத்தில் அதனை தமிழக பகுஜன் சமாஜ் கட்சியோடு ஒப்பிடலாம்.
விஜயாலயச்சோழன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான். கூன் பாண்டியன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகேந்திர வர்மன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டான். தேவாராம் பாடிய திருஞான சம்பந்தரைத் தவிர மாணிக்க வாசகர், சுந்தரர், திருநாவுக்கரசர் என யாவரும் ஆதியில் சமணர்கள் தான்.
சமணத்தை பின்பற்றிய போது எழுதிய இலக்கியங்களை எரித்தும், படித்த பள்ளிகளை அழித்தும், சமணக் கோயில்களை சிவாலயங்களாக மாற்றிக் கொண்டும் சைவர்கள் ஆயினர். சேர சோழ பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் என்று அனைவரும் சமணத்தில் இருந்துதான் சைவத்திற்க்கு மாறியவர்கள் தான்.
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த அத்தனை சிவன் கோயில்களும் சமண கோயில்கள் தான், பழமை வாய்ந்த அத்தனை பெருமாள் கோயில்களும் சமணக் கோயில்கள் தான், இன்னும் சொல்லப்போனால் பழமை வாய்ந்த அத்தனை முருகன் கோவில்களும் சமண கோயில்கள் தான்.
விஜய நகர பேரரசைத்தோற்றுவித்த ஹரிஹரனும் புக்கனும் திருப்பதிக்கு செல்கின்றார்கள், அங்கு உள்ள சமண துறவிகளை மிரட்டுகிறார்கள் சிலையை பெருமாள் சிலையாக மாற்றுங்கள், நீங்களும் வைணவத்திற்க்கு மாறுங்கள் இல்லையேல் சிரவண பெலகோலாவில் உள்ள பாகுபலி சிலையை உடைப்போம் என்று மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு பயந்து சமண துறவிகள் வைணவர்களாக மாறுகிறார்கள். நேமிநாதர் சிலையை ஏழுமலையான் சிலையாக மாற்றுகிறார்கள். இதனை உறுதிசெய்யும் இரண்டு கல்வெட்டுகள் பெங்களூர் அருங்காட்சியகத்திலும் மைசூரிலும் இருக்கிறது.
தென் இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சமண கோயில்கள் சிவன் கோயில்களாக,பெருமாள் கோவில்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழக பௌத்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் புத்தர் கோவில் என்றும், சமணர் எச்சங்களை எல்லாம் புத்தர் எச்சங்கள் என்றும் பேசியும் எழுதியும் புளாங்கிதமடைகின்றனர்.
‘வேர்த்திறைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ’ என்றும்,
‘கல்லினை, செம்பினை, கட்டையை கும்பிடல் புல்லறிவாகுமேடி, குதம்பாய் புல்லறிவாகுமேடி” என்றும் திருமூலர், சிவவாக்கியர், குதம்பைச் சித்தர் போன்றோர் வழி நின்று சமணம் வைதீக எதிர்ப்பு களத்தில் இறங்கி அடித்தத்தாடியபோது பெளத்தம் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு நின்றதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், சகோதர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான நிலைபாட்டை புரட்சி பாரதம் எடுப்பதை போன்றே அன்றைய காலகட்டத்தில் சமணத்துடன் மல்லுக்கட்டிக்கொண்டுதான் நின்றது பௌத்தம்.
சமணர்கள் சிலப்பதிகாரம் படைக்க அதற்கு பதிலாக பெளத்தர்கள் மணிமேகலை இயற்றினார். மணிமேகலைக்கு பதிலாக சமணர்கள் சீவக சிந்தாமணியும்,வளையாபதியும் எழுத, அதற்கு நிகராக குண்டலகேசியை கொண்டுவந்தார்கள் பெளத்தர்கள். குண்டலகேசிக்கு பதிலாக சமணர்களால் சூளாமணியும் நீலகேசியும் எழுதப்பட்டது.
ஐந்து பெருங் காப்பியங்களில் மூன்று பெரும் காப்பியங்கள் சமணம் இரண்டு காப்பியங்கள்தான் பௌத்தம், அதன்பிறகு ஐந்து சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணம், விருத்த நூல்கள் அனைத்தும் சமணம், நிகண்டு நூல்கள் அனைத்தும் சமணம், பதிணென் கீழ் கணக்கு நூல்கள் அனைத்தும் சமணம். இதில் திருக்குறள் மட்டும் எவ்வித சார்பும் சாயமும் இல்லாமல் அடையாளப் படுத்தப்பட்டது.
நன்னூல்தான் இருப்பதிலேயே சிறந்த இலக்கண நூல், கவிதைகளை படைக்க பயன்படுத்தப்படுவது நன்னூலை தான். இதுவும் சமண நூல் தான். புராணங்கள், நாடகங்கள், பிள்ளைத்தமிழ் என்று தமிழுக்கு அதிக இலக்கியங்களை தந்ததில் முதலிடம் பிடித்தவர்கள் சமணர்கள் தான். அடுத்து சைவமும், அதற்கடுத்து வைணவமும், அதன்பின் கிருஸ்தவமும், அதற்கடுத்து இசுலாமும் இடம்பிடிக்க, இறுதியாக தான் பௌத்தம் வருகிறது.
மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம், இவைகளை தவிர பாலியிலிருந்து தமிழுக்கு வந்தவைதான் பிங்களகேசி, அஞ்சன கேசி, கால கேசி போன்ற நூல்கள். பௌத்தம் இங்கு அழிக்கப்படவே இல்லை. ஏனென்றால் பௌத்தம் ஒரு பெரும்பாண்மை மதமாகவே இல்லை. அது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது. காலப்போக்கில் காணாமலும் போய்விட்டது.
சைவத்தாலும் வைணவதாலும் சமணம் உள்வாங்கப்பட்டும் அதன்பின் சைவமும் வைணவமும் கூட்டி சேர்ந்து அனல்வாதம் புனல் வாதம் நடத்தி சமணத்தை அழித்தது. திருப்பதி மலையைச்சுற்றிலும் உள்ள சிலைகள் அனைத்தும் சமண சிற்பங்கள் தான். காஞ்சிபுரத்தில் இருப்பது கூட சமண சிற்பங்கள் தான்.
வரலாற்றுத் தொன்மம் சுமந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால கோவில்களின் பட்டியல் 60% மேல் சமண கோவில்கள்தான், மீதி சிவன் கோவில் பெருமாள் கோவில், முருகன் கோவில்கள், ஒன்று கூட புத்தர் கோவிலோ எச்சங்களோ இல்லை.
நமது நவயான புத்த மத ஆதரவாளர்கள் அந்த சமண கோவில்களை எல்லாம் புத்தர் கோயில்கள் என்று பரப்புகின்றனர். புத்தர் தலையை வெட்டி யானை தலையை ஒட்டி விநாயகர் உருவானதாக வரலாறு எழுதிக் கொண்டிருக்கின்றனர். அது பெரும் வரலாற்று பிழை என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
சமரன்