chennireporters.com

சட்டத்துறை அமைச்சரின் பெயரால் பறிக்கப்பட்ட ஆவின் பாலக உரிமம்.-தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க பால் சங்கம் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நவீன ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரி பால் முகவரான திரு. செல்வராஜ் என்பவர் கடந்த 17.11.2020அன்று புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்த பால் முகவர் திரு. செல்வராஜ் அவர்களின் மனுவை பரிசீலித்த ஆவின் பொதுமேலாளர் டாக்டர் திரு. P.பாலபூபதி அவர்கள் பரிசீலனைக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்டு வட்டாட்சியர்.

அலுவலகத்தில் ஆவின் பாலகம் அமைக்க ஒப்புதல் வழங்கிடக் கோரி 23.11.2020ல் அறந்தாங்கி வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆவின் பொதுமேலாளரின் கடிதத்தின் அடிப்படையில் அறந்தாங்கியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நவீன ஆவின் பாலகம் அமைக்க 10×10அளவில் இடத்தை ஒதுக்கி அதற்கு வாடகை நிர்ணயம்

செய்து தரக் கோரி அறந்தாங்கி வட்டாட்சியரான திரு.மார்ட்டின் லூர்து கிங் அவர்கள் பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் கட்டுமானப் பராமரிப்புத்துறை செயற்பொறியாளருக்கு 09.07.2021ல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அறந்தாங்கி வட்டாட்சியரான திரு. மார்ட்டின் லூர்து கிங் அவர்களின் கடிதத்தை பரிசீலித்த பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின்.

தென்மேற்கு பகுதியில் நவீன ஆவின் பாலகம் அமைக்க 10×10அளவில் இடத்தை ஒதுக்கி அதற்கு வாடகையும் நிர்ணயம் செய்து 04.02.2022அன்று அனுமதி அளித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆவின் பாலகம் அமைக்க தேவையான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பால் முகவர் திரு. செல்வராஜ் அவர்கள் அனைத்து அனுமதி கடிதங்களோடு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி அறந்தாங்கி வட்டாட்சியர் திரு. காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து ஆவின் பாலகம் திறக்க அனுமதி கோரியுள்ளார்.

ஆனால் அறந்தாங்கி வட்டாட்சியர் அவர்களோ அதற்கான அனுமதி கடிதத்தை வழங்காமல் இரண்டு மாதங்களாக இன்று போய் நாளை வா என்கிற கதையாக இழுத்தடித்து காலம் தாழ்த்தியதோடு தற்போது.

அறந்தாங்கி பகுதியில் நான்கிற்கும் மேல் உணவகங்கள் நடத்தி வருபவரும், உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளருமான கருப்பையா என்பவரின் மகன் கணபதி என்கிற நபருக்கு பால் முகவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட நவீன ஆவின் பாலகம் நடத்துவதற்கான அனுமதியை அளித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த பால் முகவர் திரு. செல்வராஜ் அவர்கள் வட்டாச்சியரிடம் கேட்டதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்களின் பரிந்துரையோடு அவர் வந்ததாலும், அமைச்சரின் அழுத்தத்தாலும் அதனை மறுக்க முடியவில்லை என கூலாக தெரிவித்துள்ளார்.

வேறு ஒரு ஆவின் பாலகத்தில் பணி செய்து அந்த வருமானத்தில் மாற்றுத்திறனாளி தாயாரையும் தனது குடும்பத்தையும் பால் முகவர் திரு செல்வராஜ் அவர்கள் கவனித்துக் கொண்டு வந்த நிலையில் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில்

ஆவின் பாலகம் அமைப்பதால் அதன் மூலம் தனது வாழ்வாதாரம் உயரும், பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், தனது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க முடியும் என்று நம்பியவரின் எண்ணத்தில் சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்களின் செல்வாக்கினைப் பயன்படுத்தி அறந்தாங்கி

வட்டாட்சியர் திரு. காமராஜ் அவர்களும், உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. கருப்பையா அவர்களின் மகன் திரு. கணபதி அவர்களும் மண் அள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்களின் செல்வாக்கினை பயன்படுத்தி குறுக்கு வழியில் சென்று ஆவின் பாலகம் அமைக்க அனுமதி பெற்ற திரு. கணபதி என்கிற நபர் மீதும், அதற்கு துணை போன அறந்தாங்கி

வட்டாட்சியர் திரு. காமராஜ் அவர்கள் மீதும் தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு அந்த ஆவின் பாலகத்தை பால் முகவர் திரு. செல்வராஜ் அவர்கள் நடத்திட அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பால் முகவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு ஆவின் பாலகம் நடத்திட அனுமதி வழங்கப்படவில்லை என்றால் அதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைப்பு :- ஆவின் பாலகம் தொடர்பான ஆவண நகல்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
16.04.2022 / பிற்பகல் 2.21மணி.

இதையும் படிங்க.!