chennireporters.com

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.

தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த அஇஅதிமுக அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் 2018ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் அமைதியான முறையில் முறையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இச்சம்பவத்தை கண்டித்தும், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியது. ஆனால், அன்றைய அஇஅதிமுக அரசு குற்றமிழைத்த போலீசார் மீது ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் மறுத்து வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18ந் தேதி தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக பல முக்கிய விசயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வெளிவந்துள்ள அந்த செய்திகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ச்சியாக சொல்லி வந்த ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தை பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வன்மத்தோடு பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், அந்த செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாளாமல், மறைந்து கொண்டு திட்டமிட்டு குறி பார்த்து சுடக் கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களை குருவிகளை சுடுவதைப் போல் சுட்டுக் கொன்றுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறும் வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான அப்போதைய ஐஜி, டிஐஜி, எஸ்.பி அதிகாரி உள்பட 17 பேர் மீதும், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நீதி விசாரணையின் முழு அறிக்கையையும் ஆய்வு செய்த பிறகே அவ்வறிக்கை சம்பந்தமாக தெளிவான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்ற போதிலும், தற்போது அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியவை உண்மை என்பதை உறுதி செய்துள்ளது.

 

அதேசமயம், இச்சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக செய்திகள் உள்ளன. இதுமட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவினை களத்தில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியுமா என்பதும், அரசின் உயர்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் சம்பந்தமில்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் உள்ளது.

தமிழக அரசும் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு தாமதப்படுத்துவதானது மேலும், மேலும் குழப்பங்களையும், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு, குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சி.பி.ஐ.க்கு கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட பல்வேறு அமைப்புகள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து தற்போது உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள குற்றபத்திரிகை விபரங்கள் மிகவும் அதிர்ச்சியானதாகவும், மோசடியானதாகவும் உள்ளது.

இச்சம்பவத்தில் ஒரு காவல்துறை ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததானது முழு உண்மையை மண் மூடி மறைப்பது மட்டுமின்றி, உயிர் நீத்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் செல்வாக்கு அடிப்படையிலேயே இத்தகைய மோசடியான குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது என கருத வேண்டியுள்ளது. விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. மேலும் இந்த விசாரணை அதிகாரிகளை உடனடியாக மாற்றி நேர்மையான விசாரணை அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

இதையும் படிங்க.!