நடிகர் சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அவரை பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சராக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். சிரஞ்சீவி, பிரசா ராஜ்யம் கட்சியை தொடங்கினார். ஆனால் அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் அவர் தனது கட்சியை காங்கிசுடன் இணைத்து கொண்டு மத்திய அமைச்சரானார். 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது சிரஞ்சீவி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தெலுங்குதேசம், தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு, துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்றார். அதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியின் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவிலும் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்றார். பிரதமர் மோடியுடன் அவர் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகின. அதோடு சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் பரவ தொடங்கின.
அதோடு அரசியல் வட்டாரத்தில், பிரதமர் மோடி விரைவில் நடிகர் சிரஞ்சீவியை மத்திய அமைச்சரவையில் சேர்த்து கொள்ளலாம் என்று பேசப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டுவது, தம்பி பவன் கல்யாண் ஆந்திராவில் தெலுங்குதேசம் மற்றும் பாஜக கூட்டணியில் இருப்பது உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் இந்த தகவல் என்பது பரவி வருகிறது.
மேலும் பாஜக தலைவர்களும் சிரஞ்சீவியை கட்சிக்குள் இழுக்க திட்டமிட்டு வருகின்றனர். சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது பற்றி பாஜக தலைவர்கள் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் வரும் ஜுன் மாதம் 4 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதில் ஒரு இடத்தில் சிரஞ்சீவியை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவி முன்னணி நடிகர் என்பதோடு, கபு சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முதலில் சிரஞ்சீவிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு இப்போது தம்பி பவன் கல்யாணுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இதனால் கபு சமுதாய மக்களின் ஓட்டுகளை பெற சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் வழங்க பாஜக வியூகம் வகுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் கூட இதுபற்றி பாஜக மற்றும் சிரஞ்சீவி சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதோடு மீண்டும் அரசியலில் நுழைவது தொடர்பாக சிரஞ்சீவி எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்.

அதேவேளையில் சிரஞ்சீவி பாஜகவில் இணைந்து செயல்பட உள்ளதாக பரவும் இந்த தகவல் ஒன்றும் புதிது அல்ல. ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு, துணை முதல்வராக பவன் கல்யாண் பொறுப்பேற்றபோது பிரதமர் மோடியுடன் சிரஞ்சீவி நெருக்கம் காட்டியது முதல் இந்த தகவல் பரவி வருகிறது. தற்போது மத்திய அமைச்சரின் கிஷண் ரெட்டியின் டெல்லி வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன், நடிகர் சிரஞ்சீவி பங்கேற்று இருப்பது இப்போது விவாதத்தை கிளப்பி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.