#Supreme Court grants permission to light a lamp on a pillar at Tirupparankundram; திருப்பரங்குன்றம் தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி.

November 22, 2026

By இரா. தேவேந்திரன்.

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி வரும் நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப ஆராதனை திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், திருப்பரங்குன்றம் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்றும், மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும், மலை முழுவதும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறையின் அறிவுறுத்தலோடு தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு கார்த்திகை தினத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 150 ஆண்டு கால நடைமுறையை மாற்றினால் சர்ச்சை ஏற்படும் என்றும், வழக்கமான நடைமுறையால் மத ரீதியிலான மோதல்கள் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளால் எந்தவித சலசலப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது, என்றும் அதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று (18-11-26) மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில், ‘100 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் அருகே தான் விளக்கு ஏற்றப்படுவதே வழக்கம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்படும் வழக்கத்தை மாற்றக்கூடாது. தீபத்தூண் விவகாரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது. திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் அல்ல, நில அளவைக் கல். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் இதே அளவைக் கல்லைப் பார்க்கலாம். ஆங்கிலேயர் காலத்தில் மலைப் பகுதிகளில் நில அளவைக்கு தூண்களைப் பயன்படுத்தினர்’ என வாதிடப்பட்டது. இதையடுத்து தர்கா தரப்பில், ‘மன்னர்கள், ஆங்கிலேயர் காலம் முதல் இப்போது வரை தர்காவுக்கான ஆவணங்கள் உள்ளன. தர்காவுக்கான பட்டய உரிமை மன்னர் காலத்தில் இருந்து உள்ளது’ என வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘விரிவான வாதங்கள் வேண்டாம், இடைக்கால உத்தரவுக்கான வாதங்களை மட்டும் வையுங்கள். இறுதி விசாரணைக்காக உங்கள் சக்தி அனைத்தையும் சேமித்து வையுங்கள்’ என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் உச்ச் நீதிமனற நீதிபதிகள் அளித்துள்ள உத்தரவில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால நிவாரணமாக கார்த்திகை திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது.அதாவது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு என்பது இடைக்கால உத்தரவு ஆகும். எனவே பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவின்படி, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்குச் செல்ல அனுமதி கிடையாது. மேலும், முழக்கங்களை எழுப்புவது, கும்பல் கூடுவது உள்ளிட்ட செயல்களுக்கும் அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தொல்லியல் துறை மற்றும் மாநில நிர்வாகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு ஆகும். அதோடு தீபத் திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவும், நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளும் எதிர்கால விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

November 22, 2026