அருண் ஐபிஎஸ்சை வைத்துக்கொண்டு எந்த ஆக்சனும் எடுக்க முடியாது என்று விஜய்யிடம் சொன்ன உளவுப்பிரிவுத்துறை அதிகாரிகள் என்ன நடந்தது? அருண் திடீரென மாற்றப்பட்டது ஏன் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் டிஜிபி அருண் ஐ.பி.எஸ்.சின் அதிரடி இடமாற்றம் தான் தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அவரை அங்கிருந்து மாற்றி, டம்மி போஸ்டிங் என சொல்லப்படுகிற ஊனமாஞ்சேரி பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டது தான் இந்த விவாதங்களுக்கு அடிப்படை .
அருணின் இந்த இடமாற்றம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ”தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இவர் நியமிக்கப்பட்ட போதே, எப்படி இது என்கிற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்திருந்தது. ஏனெனில் அவர் கடந்த திமுக ஆட்சியில் சென்னை காவல்துறை ஆணையராக கோலோச்சிய அருண், திமுக தலைமைக்கும் அதன் பவர் சென்டர்களுக்கும் மிக மிக நெருக்கமாக இருந்தார்.
இவர் செய்த பல தவறுகள் மூடி மறைக்கப்பட்டன. வெளியே தெரிந்த பல தவறுகள் மீது திமுக ஆட்சியில் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. அந்தளவுக்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார். திமுக தான் இவர்; இவர் தான் திமுக என்கிற கமெண்ட்டுகள் அந்த காலக்கட்டத்தில் அதிகாரிகளிடம் மிக பிரசித்திப்பெற்றவையாக இருந்தது.
உளவுப்பிரிவுத்தலைவர் ஐஜி.அஸ்ரா கார்க்.
அப்படிப்பட்ட திமுகவுக்கு மிக நெருக்கமான ஒருவரை, திமுகவின் ஊழல்களுக்கு காரணமான மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமிக்க, மிக மிக முக்கியத்துறையான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமித்ததுதான் பலருக்கும் சந்தேகம். அதனால் தான் எப்படி இது ? என்கிற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டது.
திமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையின் உச்ச அதிகாரியாக இருந்த ஒருவர், ஸ்டாலினிடம் ஆட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துத் திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆகிய இருவரின் நட்பு வளையத்தில் இருந்தவர் அருண். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, தற்போதைய தவெக அரசின் பவர் சென்டரிடம் நெருக்கமாகி விட்டார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, விஜய்யிடம் யார் ஆளுமை மிக்கவராக இருக்கிறார்கள் என அறிந்து அப்போதே அவர்களிடம் நெருங்கி விட்டார் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.
அருண் ஐ.பி.எஸ்.
விஜய்யின் முக்கிய பவர் சென்டர்களிடம் இந்த ஐஏஎஸ்சின் சொல்லுக்கு மரியாதை இருக்கிறது. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் உளவுத்துறையில் உச்ச அதிகாரியாக இருந்தவரும் இணைந்தே லஞ்ச ஒழிப்புத்துறைக்குள் அருணை கொண்டு வந்தனர். இதற்கு விஜய்யின் பவர் சென்டர்கள் உடந்தையாக இருந்தனர்.
தவெக அரசில் டம்மியாகப்பட்ட அருண் ஐபிஎஸ்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் நியமிக்கப்படும் போது, அதனை உள்துறை செயலாளர் மணிவாசன் விரும்பவில்லை. எதிர்க்கவும் செய்திருக்கிறார். ஆனால், முதல்வர் விஜய்யிடம் பவர் செண்டர்கள் கொடுத்த அழுத்தம், மணிவாசனின் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன. லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரானார் அருண்” என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அருண் கொண்டுவரப்பட்ட பின்னணிகளை விவரித்தனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ”திமுக மாஜிக்களுக்கு எதிராக அனைத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கிறேன் என அருண் உறுதியளித்திருக்கிறார். ஆனால், திமுக மாஜிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், திமுக தலைமைக்கு எதிராக விவாதிக்கப்படும் விசயங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து திமுக தரப்புக்கு லீக் செய்யப்படுகிறது. இதில் அருணின் பங்களிப்பு தான் அதிகம் இருக்கிறது என கடந்த 2 வாரங்களாகவே உள்துறை செயலாளர் மணிவாசன், முதல்வர் விஜய்க்கு தகவல் தெரிவித்தபடி இருக்கிறார்.


குறிப்பாக, சில காரணங்களுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் திமுக மாஜி அமைச்சர் எ.வ.வேலு. அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, ரெய்டையும் நடத்தியது. சிங்கப்பூர் சென்ற வேலு, ஒரு நாளுக்கு முன்னதாகவே சென்னை திரும்புவதாக இருந்தது. ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதால், அவர் சென்னை திரும்பும் போது கைது செய்ய சீக்ரெட்டாக சில நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த விசயம் அருண் மூலம் வேலுவுக்கு சொல்லப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், சென்னைக்கு வரும் போது, சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் ; அதை வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுங்கள். சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் ஓடி ஒளிய மாட்டேன். குறிப்பிட்ட தினத்தில் ஆஜராவேன் என காட்டமாக பேசுங்கள். சம்மனில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னதாகவே சென்னைக்கு வந்து விடுங்கள். சம்மன் இருக்கும் போது, உங்களை கைது செய்ய முடியாது என்கிற யோசனையையும் வேலுவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் அருண். அதன்படியே சென்னை ஏர்போர்ட்டில் நடந்து கொண்டார் வேலு.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை ஏர்போர்ட்டில் அவரை கைது செய்யாமல் போனதற்கு காரணம் இதுதான். கைது செய்யப்படுவார் என்பதாக முதல்வர் விஜய்யிடம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த சூழலில், அந்த ஆக்ஷன் எதுவும் இல்லாததால், அதைப் பற்றி விஜய் விசாரிக்க, மேற்கண்ட விபரங்களை விளக்கியிருக்கிறார் மணி வாசன். சுருக்கமாக சொல்வதானால், அருணை வைத்துக் கொண்டு திமுகவுக்கு எதிரான எந்த ஊழல் நடவடிக்கையையும் எடுக்க முடியாது.
உதயநிதி ஸ்டாலின்.
அவரை வைத்துக்கொண்டு மாஜி வேலுவிடம் விசாரிக்கவும் முடியாது. இவரது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். மேலும், என்ன மாதிரி கேள்விகள் கேட்கப்பட இருக்கிறது , அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் போன்ற பல தகவல்களும் வேலுவுக்கு தெரியப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெளிவாக விவரித்திருக்கிறார். டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் சில உயர் அதிகாரிகளும் முதல்வர் விஜய்க்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படி உள்துறை செயலர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் ஆகியோர் கொடுத்த தகவல்கள் தான், உடனடியாக அருண் மாற்றப்பட்டதன் பின்னணி ” என்று விரிவாக சொல்கிறது ஐ.பி.எஸ். வட்டாரங்கள்.
தண்டராம்பட்டு ஏ.வ. வேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால் முதலமைச்சர் இடம் சரி என்று தலையாட்டிக்கொண்ட முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் அருண் தன்னுடைய திமுக விசுவாசத்தை திமுகவிடம் அனுபவித்த நன்றி விசுவாசத்தை மனதில் வைத்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் தண்டராம்பட்டு வேலுவுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டார். என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.


இதனால் உஷாரான முன்னாள் அமைச்சர் வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எதுவும் பெரிதாக சிக்காமல் சோதனை உப்பு சப்பு இல்லாமல் போனது. இதற்குக் காரணம் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் அருண்தான் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சை என்கிற பெயரில் உல்லாச பயணம் போய்விட்டார். அங்கு தன்னுடைய சொத்துக்களை முதலீடு செய்ய போய்விட்டதாக தகவல்கள் சொல்லப்பட்டது. ஆனால் பொதுவெளியில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சர் வேலு என்ன செய்கிறார் எங்கே போகிறார் என்கிற அனைத்து விஷயங்களையும் உளவு பிரிவு தலைவர் அஸ்ரா கார்க் வீடியோ ஆதாரங்களுடன் முதலமைச்சர் விஜய்க்கு எடுத்துக்காட்டினார். மேலும் அருண் வேலுவுக்கு பேசிய செல்போன் உரையாடல் மற்றும் அனைத்து விதமான தகவல்களையும் ஆதாரங்களுடன் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.


இதைப் பார்த்ததும் கோபமடைந்த முதலமைச்சர் விஜய் கண் சிவந்து தட்டி தூக்குங்கள் வேலுவை என்று உத்தரவிட்டதால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தகவலையும் அருண் தரப்பினர் முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு சொல்லப்பட்டதால் அசிங்கப்படாமல் நாமாகவே விசாரணைக்கு சென்று விடலாம் என்று சிங்கப்பூரிலிருந்து பறந்து ஓடி வந்தார் வேலு.
அது மட்டும் இல்லாமல் முதல்வரின் செல்போன் உரையாடுகளை அருண் ஒட்டு கேட்டதாகவும் அந்த உரையாடல்களை முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்ததாகவும் உளவுத்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இனிமேலும் விட்டு வைத்தால் அருணால் நமது அரசாங்கத்திற்கே ஆபத்து வந்துவிடும் என்ற நிலையில் முடிவெடுத்த முதலமைச்சர் விஜய் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில் தான் அருண் திடீரென தூக்கி அடிக்கப்பட்டார். இதுதான் அருண் மாற்றப்பட்டதற்கான உண்மையான காரணம் என்கிறார்கள். மிக உயரிய பொறுப்பில் உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள்.


இன்னும் சில போலீஸ் அதிகாரிகள், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் கைது செய்யப்படலாம். அது குறித்தான அனைத்து கோப்புகளும் தனி, தனியாக உளவுப்பிரிவில் டீம்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த ஆட்சியில் அருண் நடத்திய ஊழல்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த நாட்களில் அருண் செய்த விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.