பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற மோசடிகளுக்கு கண்டனம் – போலிப் புத்தகங்கள் மீது முழு விசாரணை நடத்துக – தமுஎகச மாநிலக்குழு
கோவை மாநகரில் பெரியார் அறிவுலகம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தான் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் அறிவு மையங்களுள் ஒன்றாக கருதப்பட்ட அந்நூலகத்தில் மிகப் பெரிய ஊழலும் அறிவு மோசடியும் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
300 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக கடந்த ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பகுத்தறிவை வளர்த்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாகவே கருதப்பட்டது. ஆனால் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அந்த வாய்ப்புகளை பொய்யாக்கியுள்ளது.
மதுக்கூர் இராமலிங்கம்
தலைவர்
நூலகத்துக்கான நூல்களை கொள்முதல் செய்வதில் நடைபெற்றுள்ள ஊழல் தமிழ்நாட்டு அறிவு பாரம்பரியத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. கடந்த காலங்களில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்த பாரபட்ச அணுகுமுறைகள் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரியார் அறிவுலகத்தில் ஒரு மிகப்பெரிய அறிவு மோசடி நடந்தேறி உள்ளது. இல்லாதப் பல பெயர்கள் மோசடியாக உருவாக்கப்பட்டு எழுத்தாளர்கள் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெயர் தெரியாத பதிப்பகங்களில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிற்போக்குக் கருத்துக்களை பரப்பக்கூடிய நூல்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியார் பெயரில் உருவாக்கியுள்ள நூலகத்தில் இப்படி ஒரு மோசடியா?. இதற்காக அமைக்கப்பட்ட நூலகக் குழுவில் யார் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளார்கள்? அக்குழு நூல்களை கொள்முதல் செய்வதற்கு கடைப்பிடித்த நடைமுறைகள் என்ன? இப்படிப்பட்ட அறிவு மோசடிக்கு ஊழலுக்கு துணை நின்றது யார்? என்று பல கேள்விகள் தமிழக அறிவுலகத்தின் மத்தியில் எழுந்துள்ளது. இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
ஒரு சமூகத்தின் அறிவு பாரம்பரியத்தின் தொடர்ச்சியை கொண்டு செல்ல வேண்டிய கண்ணிகளாக உள்ளவை நூலகங்களே. அப்படிப்பட்ட நூலகங்களில் அறிவுக்கு விரோதமான மோசடியாக எழுதப்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. அடுத்த தலைமுறை இந்த நூல்களை வாசிப்பார்களானால் தமிழகத்தின் அறிவுப் பாரம்பரியத் தொடர்ச்சி என்னவாகும் ? இதுவரை இப்படிப்பட்ட அறிவு மோசடி நடந்ததாகத் தமிழகம் கண்டதில்லை. எனவே எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பி உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒன்று விடாமல் ஆராயப்பட வேண்டும. இதற்கு பின்னால் உள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அரசியல் பாகுபாடின்றி அவர்களைக் கண்டறிந்து மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
களப்பிரன்
பொதுச்செயலாளர்
இதற்குக் காரணமான நூலகக் குழுவை மாற்றி அமைத்து, தமிழக அறிவுப் பாரம்பரியத்தின் மீது அக்கறை உள்ள அறிவு ஜீவிகளை இணைத்து புதியக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய மோசடிகள் இனிமேல் தொடராது இருக்க தமிழக அரசு சிறப்புக் கண்காணிப்பு முறைகளுக்கான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். பெரியார் அறவுலகத்தில் நேர்ந்துள்ள இந்த அறிவு மோசடியை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்சொன்ன நடவடிக்கைகளை செயல்படுத்த ஒரு நேர்மையான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள ஒரு புலன் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.