2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
ரூ. 2,000 புழக்கத்தில்
2020- 274 கோடி (2.4%)
2021-245 கோடி (2%)
2022- 214 கோடி(1.6%)
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி 2016, நவம்பா் 8-ஆம் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாததாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிதாக ரூ.2,000, ரூ.500, 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் (கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக வெளியிடப்பட்ட) ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் தொடா்ந்து குறைந்து வருவதாக இந்திய ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்படுள்ளதாவது: புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை நிகழாண்டு மாா்ச் வரையில் 13,053 கோடியாக உள்ளது.
இது முந்தைய ஆண்டு 12,437 கோடியாக இருந்தது. 2020-இல் ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையிலான புழக்கம் 274 கோடியாக (2.4%) இருந்தது. இது 2021-இல் 245 கோடி (2%), 2022, மாா்ச் வரையில் இது 214 கோடியாக (1.6%) உள்ளது. புழக்கத்தின் அடிப்படையிலான ரூ.2000 நோட்டின் மதிப்பு 2020-இல் 22.6 சதவீதத்தில் இருந்து 2021-இல் 17.3 சதவிதமாகவும், 2020-இல் 17.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டு 3,867.90 கோடியாக இருந்த ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை வகையிலான புழக்கம் நிகழாண்டு மாா்ச் வரையில் 4,554.68 கோடியாக உயா்ந்துள்ளது. அதிகப்படியான எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளாக ரூ.500 (34.9%). அடுத்தபடியாக ரூ.10 (21.3%) உள்ளது. புழக்கத்தின் அடிப்படையிலான ரூ.500 நோட்டின் மதிப்பு 2021-இல் 60.8 சதவீதத்திலிருந்து 2022-இல் 73.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.
புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நிகழாண்டு ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.28.27 லட்சம் கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தில், ரூ.2000, ரூ.500 நோட்டுகள் மட்டும் நிகழாண்டில் 87.1 சதவீதம் உள்ளது. இது கடந்த ஆண்டு 85.7 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-இல் 336.3 கோடி எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் இருப்பதாகவும், 2018 முதல் புதிதாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படாததால் ரூ.2000 நோட்டுகளின் புழக்க எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்திருந்தாா்.
மேலும், ரூபாய் நோட்டுகள் சேதமடைவதாலும் புழக்கத்தில் இருந்து குறைவதற்கு ஒரு காரணம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா். எனினும், தற்போது ஆண்டுதோறும் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதற்கு ரிசா்வ் வங்கி எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.