அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசுக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவியும் அவருடைய காதலனும் தனிமையில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் சில இளைஞர்கள் வந்து தனது காதலனையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி அங்கிருந்து தப்பி தனது ஹாஸ்டலுக்கு வந்து நண்பர்களிடம் தகவலை சொல்லி நேற்று அபிராமபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது .இந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜா தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ தினத்தன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கல்லூரி மாணவரா அல்லது அந்த பகுதியில் வேலை செய்யும் இளைஞரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். முதல் கட்டமாக நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியிடம் போலீசார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்றுள்ளனர். அது தவிர மாணவி யின் காதலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புடன் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் இந்த சம்பவத்தில் போலீசாருக்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் . இந்த செய்தி சமூக வலைதளங்களில் தொலைக்காட்சிகளிலும் வெளியானதும் சம்பந்தப்பட்ட மாணவி பெற்றோர் உறவினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.
இது இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு உள்ளே வரும் வெளியாட்களிடமும் மாணவர்களிடமும் தீவிர விசாரணை நடத்திய பின்னரே போலிசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.