சென்னை திருவேற்காடு பிரபல பிரியாணி கடையில் அடுத்த சர்ச்சை.. ஊழியர்கள் 2 பேர் அதிரடியாக கைது. சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள பிரபல தனியார் பிரியாணி கடையில் தரமற்ற உணவு தயாரித்த விவகாரத்தில் நேற்று சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், 15 வயது சிறுமிக்கு சில்மிஷம் அளித்த புகாரில் அக்கடையின் ஊழியரான மதன் மற்றும் சிறுமியின் சித்தப்பாவை தாக்கியதாக கிஷோர் ஆகியோர் கைதாகி உள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பான புகாரில் இருவரும் கைதாகி உள்ளனர்.. சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் யூடியூப் மூலம் பிரபலமான ஒருவர் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை அவர் பதிவு செய்து வந்தார். அந்த கடையில் சுவை பலருக்கும் பிடித்து போனதால், அப்பு கடை பிரியாணியை சாப்பிட வாடிக்கையாளர்கள் படையெடுத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களின் மூலமே அந்த பிரியாணி கடை மிகவும் பிரபலமானது. தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் அந்த பிரியாணி கடைகளின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட தனியார் பிரியாணி கடை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகமாக எழுந்தன.
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான அந்த கடை, அதே சமூக வலைதளங்களால் சிக்கலை சந்தித்துள்ளது. அண்மையில் அங்கு பிரியாணி சாப்பிட்ட சிலர், உணவு தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டி பதிவிட்டார்கள். இதேபோல் மேலும் சிலர் குறிப்பிட்ட தனியார் பிரியாணி கடை மீது அதிருப்தி தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டார்கள். சென்னையில் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரியாணி கடைகள்..
மிகப்பிரபலமான பிரியாணி கடைக்கும் சீல் இதையடுத்து தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் பிரியாணி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சென்றார்கள். அங்கு அவர்கள் ஆய்வு நடத்தினார்கள் அப்போது சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்..


இதனால் ஆத்திரமடைந்த பிரியாணி கடை உரிமையாளர் , உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், அதே கடையில் இன்னொரு விவகாரமும் சிக்கலாகி உள்ளது.

நேற்று முன்தினம் சர்ச்சையில் சிக்கிய பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க வந்த 15 வயது சிறுமியிடம் கடையில் வேலை செய்யும் மதன் என்பவர் தொல்லை கொடுத்ததாக, அச்சிறுமி தனது சித்தப்பாவிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியின் சித்தப்பா கடைக்கு வந்து இதுகுறித்து கேட்க, கடையின் மேலாளர் கிஷோர் மற்றும் மதன் இருவரும் இணைந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் கிஷோர், மதன் இருவரையும் 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
