தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றுகிறார் என்று லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
லண்டன் நகரில் செயல்படும் வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பு மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில் வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி லண்டன் உள்ள ஈஸ்ட்ஹாம் நகரில் நமஸ்தே இந்தியா உணவகத்தில் நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது தமிழர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றுகிறார் என்று மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் பேசினார். மேலும் அவர் பேசியதாவது:-


தாய்த்தமிழ் நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தொழில் நிமித்தமாகவும், மேற்படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகிற உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக சொந்த மண்ணில் இருந்து புலம் பெயர்ந்து வேறு இடத்தில் வசிப்பதும் வாழ்வதும் வருத்தம் நிறைந்தது தான் என்றாலும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது.


எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வோடும் ஒற்றுமையோடும் நமது பண்பாட்டு அடையாளங்களோடு வாழ வேண்டும்.தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நாம் செயல்பட வேண்டும் என்கிற உணர்வு நாம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
இங்கே பேசும்போது தமிழ் வழி கல்வியை பற்றியும் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக அனைத்து துறைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இல் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானதற்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான முயற்சிகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்திலும் அவரை தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலத்தில் அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆக்கப்பூர்வமான செயல்கள் நடைபெற்று வருகின்றன.


உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்பதற்கான நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு 100 சட்டங்களை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்தப் புத்தகங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2.7.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியில் தமிழ் ஒரு பாடமாக இல்லாத ஒரு குறையை போக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரி படிக்கிற மாணவர்கள் ஒரு பாடமாக தமிழ் படிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.


கடந்த 21.12.2023 அன்று மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழி வாரவிழாவில் மாண்புமிகு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அப்போது சட்டக்கல்லூரிகளில் தமிழ் ஒருபாடமாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன். அதன் பின்னர் இறுதியாக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது அந்த மேடையிலேயே விரைவில் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கப்படும் என்றும் வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.


வெறும் வார்த்தையாக இல்லாமல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று ஆறு மாதங்களுக்குள் கடந்த சட்டப்பேரவையில் பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் அனுமதியோடு சட்ட அமைச்சர் இந்த கல்வியாண்டிலேயே சட்டக் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடம் என்று அறிவித்தது மட்டுமல்ல அதற்குரிய பாடத்திட்டத்தை வடிவகைக்கும் பொறுப்பை மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் ஒப்படைத்து ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு ஆர்.தாரணி அவர்கள் தலைமையில் வல்லுனர்கள் கடந்து பேசி முடிவு செய்து பாடத்திட்டமும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் வளர்ச்சியிலும், ஆட்சி மொழியாக தமிழ் இருக்கவேண்டும் என்பதிலும் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு விரைவாக செயல்படுகிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதைப்போலவே தமிழர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடலுக்குடன் தீர்த்து வைப்பவராக இருக்கிறார்.வெளிநாட்டில் படிக்கிற மாணவர்கள் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறோமோ அந்த நோக்கம் சிதைந்து விடாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நமது எண்ணத்தை பொறுத்துத்தான் வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். எனவே எப்போதும் தாழ்வு மனப்பான்மை வந்துவிடாமல் உயர்ந்த சிந்தனையும் நல்ல நோக்கமும் கொண்டவர்களாக நாம் நமது இளைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டும்


வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்கள் ஒற்றுமையோடு, நல்ல நோக்கங்களுக்காக ஒன்றுபட்டு உயர்ந்த எண்ணத்தோடு இருக்க வேண்டும்.இளமையில் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள் நல்ல கல்வியால் உயர்ந்து இருக்கிறார்கள். அதேபோல் தவறான வழியில் சேர்கிற பணம் எப்போதும் நமக்கு இன்பத்தை தராது. திருவள்ளுவர் சொன்னதைப் போல அருளையும் இன்பத்தையும் நேர்மையான வழியில் வருகிற பொருளால் மட்டும் தான் நாம் அடைய முடியும். எனவே நேர்மையோடு செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தையும் அதே நேரத்தில் நேர்மறையான எண்ணத்தோடு எப்போதும் இருக்க வேண்டும் என்கிற உணர்வையும் நாம் எல்லோரும் பெற வேண்டும் அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை லண்டன் செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார். முடிவில் ஜைனுல் ஆபிதீன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் லண்டனில் வழக்கறிஞர்களாக இருக்கும் அப்துல் ஃபைசல், விஜய் தேவ் ஆனந்த் ஆகியோரும், இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சதீஷ் ராமதாஸ், ஆனந்த் ஆகியோரும் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராக போட்டியிடும் விஜய் பார்த்திபன் அவர்களும் அன்வர்தீன், பாரூக், அன்சாரி உள்ளிட்ட யு.கே. தமிழ் முஸ்லிம் அமைப்பைச் சார்ந்தவர்களும் டாக்டர் சுமதி லட்சுமணன், மற்றும் தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
